எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் கடந்த மாதம் 7ஆம் தேதி முதல் நேற்று மாலை 5 மணி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. அதேபோல் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 21ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மருத்துவ கல்வி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இணையதளத்தில் கட்டணம் செலுத்தி பதிவிறக்கம் செய்த மாணவர்கள் அதற்குரிய ஆவணங்களுடன் மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் நேரடியாக அளித்தனர்.
இந்நிலையில் மருத்துவக் கல்வி இயக்குநரகம் மாணவர் சேர்க்கைச் செயலர் செல்வராஜ் பேசுகையில், எம்பிபிஎஸ் பிடிஎஸ் மருத்துவப் படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்கு 38 ஆயிரத்து 955 மாணவர்களும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் சேர்வதற்கு 28 ஆயிரத்து 937 மாணவர்களும் இணையதளம் மூலம் விண்ணப்பித்துள்ளனர்.
அதேபோல் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பங்களை அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்வதற்கு 34 ஆயிரத்து 310 மாணவர்களும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் சேர்வதற்கு 25 ஆயிரத்து 322 மாணவர்களும் ஒப்படைத்துள்ளனர். மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு பூர்த்தி செய்த விண்ணப்பங்களை நாளை மாலைக்குள் உரிய ஆவணங்களுடன் மாணவர்கள் அனுப்பிவைக்க வேண்டும் என தெரிவித்தார்.