சென்னை: அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், தடகாம் பதிப்பகத்தின் சார்பில் "திராவிட மதம்" என்னும் நூல் வெளியீட்டு விழா இன்று (ஜூலை 29) நடைபெற்றது. இந்துதேச சமயங்கள் பற்றிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ள இந்த நூல், 1914 ஆம் ஆண்டில் கா.அலர்மேன் மங்கை அம்மாள் அவர்களால் எழுதப்பட்டது.
இந்த நூலின் வெளியீட்டு விழாவில் திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன், எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன், வழக்கறிஞர் அஜிதா, நூலின் தொகுப்பு ஆசிரியர் ரகுபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் இந்நிகழ்ச்சி தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்தின் தலைவர் சிவகுமார் தலைமையில் நடைபெற்றது.
எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் புத்தகத்தை வெளியிட, திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன் பெற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து பேசிய தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்தின் தலைவர் சிவகுமார், "யானைக்கும் மனிதனுக்கும் மதம் பிடித்தால் அது ஆபத்து தான்.
மனிதனுக்கு பிடிக்கும் மதங்களை வைத்து இங்கு பல்ல குற்றச் செயல்கள் மற்றும் பல இன்னல்கள் நடைபெற்று வருகின்றன. மனிதர்கள் சிலைகள் மூலம் தெய்வத்தை தேடுகிறார்கள். அது மிகவும் தவறான செயல் ஆகும். இந்த சமூகம் நம்மிடம் பயத்தின் மூலம் தான் மதத்தையும், தெய்வத்தையும் நம்ப வைத்துள்ளது.
இதையும் படிங்க: கிருஷ்ணகிரி வெடி விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி: அமைச்சர் சக்கரபாணி ஆய்வு!
சூரியன், மழை, காற்று, நீர், என்று இயற்கைக்கு பெயர் வைத்து கடவுள் என்று கூறுகின்றனர். அதே போல் சன்மார்க கொள்கைக்கு எதிரானது தான் திராவிட நெறி. மொழி, இனம் என்று இல்லாமல் சமூக நீதி மற்றும் நியாயத்தின் வழியில் இருப்பது தான் திராவிட நெறி" என்றார்.
தொடர்ந்து திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் மற்றும் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன், திராவிட மதம் நூலை பற்றியும், நூலின் ஆசிரியர் அலர்மேன் மங்கை அம்மாள் பற்றியும் பேசினர். மேலும் 3வது சைவ மகா சபை சங்கத்தில் கா. அலர்மேன் மங்கை அம்மாள் எழுதிய இந்த நூலை, மீட்டெடுத்து தொகுத்து வழங்கிய தொகுப்பு ஆசிரியர் ரகுபதிக்கு நன்றி தெரிவித்தனர்.
இதையும் படிங்க: "பாத யாத்திரை அல்ல;பாவ யாத்திரை" - அமித்ஷா, அண்ணாமலையை விமர்சித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!