சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மேட்ரிமோனியல் மூலம் தன்னை அணுகி திருமணம் செய்து கொள்வதாகக் கூறி லட்சக்கணக்கில் பணத்தை மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்துள்ளார்.
அந்தப்புகாரில், பிரஷாந்த் என்ற பெயரில் மருத்துவர் ஒருவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாகவும் அமெரிக்காவில் இருப்பதால் சென்னை வந்து திருமணம் செய்துகொள்வதற்கு பணம் தேவை எனக்கூறியும் தவணை முறையில் பணத்தைப் பெற்று மோசடி செய்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் புகாரை ஏற்று மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் வசித்து வரும் பிரசாந்த் குமார் கடந்த 2017ஆம் ஆண்டு இதேபோன்று மருத்துவர் எனக்கூறி பல பெண்களிடம் பணமோசடியில் ஈடுபட்ட விவகாரத்தில் மத்திய குற்றப்பிரவு போலீசாரால் கைது செய்யப்பட்டவர் என்பதும் இதுபோன்று பல பெண்களிடம் மேட்ரிமோனியல் மூலம் பண மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு முன்பு மேட்ரிமோனியல் மோசடி மன்னன் பிரசாந்தை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பிரசாந்திடம் போலீசார் நடத்திய விசாரணையில், தான் நடத்திவந்த மழலையர் பள்ளிக்கூடத்திற்கு ரோபாட் ஒன்றை வாங்குவதற்கு பணம் தேவைப்பட்டதாகவும் அதனால் மேட்ரிமோனியல் மோசடியை மீண்டும் கையில் எடுத்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தொடர்ந்து மேட்ரிமோனியல் மூலமாக பெண்களை மோசடி செய்ததால் சென்னை காவல் ஆணையர், பிரசாந்தை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதையும் படிங்க: போலி கால் சென்டர் நடத்திய மற்றொரு கும்பல் கைது!