தமிழ்நாட்டில் முழு ஊரடங்கால் கடைகள் திறப்பதற்கான கால அளவு குறைந்து உள்ளது. இதன் காரணமாக மார்க்கெட்டில் ஒரே நேரத்தில் கூட்டமாக பொதுமக்கள் கூடி பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். இதனால் தொற்றுப் பரவல் அதிகரிக்கும் ஆபத்து ஏற்பட்டு உள்ளது.
கரோனா இரண்டாம் அலை வேகமாகப் பரவி வருவதால், அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. குறிப்பாக காய்கறி, மளிகை கடைகள் உள்ளிட்ட அத்தியாவசியக் கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நான்கு மணி நேரத்திற்குள் தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை பொதுமக்கள் கூட்டமாக வந்து வாங்கிச் செல்கின்றனர்.
கரோனா பரவல் அதிகரித்து வருவதால் ஊரடங்கை கண்டிப்புடன் அமல்படுத்த பல்வேறு தரப்பினர் விடுத்த கோரிக்கையை ஏற்று மே 15ஆம் தேதி முதல் கடுமையான கட்டுப்பாடுகளை அரசு அமல்படுத்தி உள்ளது. குறிப்பாக காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை கடைகள் இயங்கி வந்த நிலையில், தற்போது அந்த நேரம் 4 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் காலை 6 முதல் 10 மணி வரை, ஒரே நேரத்தில் கூட்டமாக மக்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். தினமும் கடைகள் இயங்கி வரும் நிலையில் வாரத்திற்குத் தேவையான பொருட்களை மொத்தமாக வாங்காமல் பொதுமக்கள் தினமும் வாங்கிச் செல்வதால் தொற்றுப் பரவல் குறையாமல் அதிகரித்த வண்ணம் உள்ளது.
கோயம்பேடு மார்க்கெட்டில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மொத்த வியாபாரிகளுக்கு மட்டுமே அனுமதி என இருந்தாலும்; மற்ற பகுதிகளை விட சற்று விலைக் குறைவு என்பதால் நேரடியாக வந்து பொதுமக்களும் வாங்கிச் செல்கின்றனர். கடந்த முறை கோயம்பேடு மார்க்கெட் கரோனா பரவல் மையமாக மாறியதால், திருமழிசை பகுதிக்கு மார்க்கெட் மாற்றப்பட்டு வியாபாரம் நடந்து வந்தது. இந்நிலையில் பழைய மாதிரி 6 மணி நேரம் விற்பனை நடைபெற அனுமதிக்க வேண்டும் என அரசிற்கு வியாபாரிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர். மதுரை, திருச்சி காந்தி மார்க்கெட் பகுதிகளிலும் இதே நிலைதான் நீடிக்கிறது.
காவல் துறை சார்பில் ஒழுங்குப்படுத்த முயற்சி செய்தாலும் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதிலேயே மும்முரமாக இருக்கின்றனர். கடந்த காலத்தைப் போல மார்க்கெட்டுகளை அகலமான இடங்களில் தனி மனித இடைவெளி உடன் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
அரசு செய்ய வேண்டியது என்ன?
- காய்கறி மார்க்கெட்டுகளை கடந்த காலங்களைப் போல பரந்த மைதானத்திலோ அல்லது பேருந்து நிலையங்களிலோ பரவலாக அமைக்க வேண்டும்.
- காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை கடைகள் திறந்து இருக்க அனுமதிக்கலாம்.
- அடுக்கு மாடி குடியிருப்புப் பகுதிகளில் நேரடியாக காய்கறிப் பொருட்களை சுழற்சி முறை விற்பனையில் ஈடுபட அனுமதி அளிக்கலாம்.
- மளிகைப் பொருட்களை ஆன்லைன் வணிகம் மூலம் வீடுகளுக்கே விநியோகிக்க 50 விழுக்காடு பணியாளர்களை மாலை நேரங்களில் பயன்படுத்தலாம்.
- மளிகைப் பொருட்களை ஆன்லைன் வணிகத்திற்கு பெரும்பாலும் ஊக்குவித்தால் கடைகளில் அதிக கூட்டம் கூடுவதைத் தவிர்க்கலாம்.
- மீன், இறைச்சிக் கடைகள் சனி, ஞாயிறு விடுமுறை என்பதால், வார நாட்களிலேயே வாங்க குவிந்து விடுகின்றனர். இதை தடுப்பது குறித்து இறைச்சி கடை சங்கத்தினருடன் ஆலோசனை நடத்தலாம்.
- வியாபாரிகளுக்கு சிறப்பு முகாம் மூலம் தடுப்பூசி அனைவருக்கும் செலுத்த வேண்டும். குறிப்பாக, காய்கறி மார்க்கெட்டுகளில் அதிக அளவில் மக்கள் கூடுவதால் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
இது குறித்து சமூக சமத்துவத்திற்கான பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் கூறியதாவது, "கடந்த முறை தள்ளுவண்டி மூலம் காய்கறி விற்பனை அதிக அளவில் நடந்ததால் கூட்டம் கூடவில்லை. அதேபோல் விற்பனை நேரத்தை காலை 6 மணி முதல் 12 மணி வரை அதிகரிக்க வேண்டும். வியாபாரிகளுக்கு முன்னுரிமை கருதி தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும். இறைச்சிக் கடைகள் மற்ற நாட்களிலும் இயங்க அனுமதிக்க வேண்டும்" என்றார்.
மேலும் வியாபாரிகள் சங்கத் தலைவர் விக்கிரமராஜா கூறியதாவது, "கடைகள் திறக்கும் நேரத்தை மதியம் 2 மணி வரை அதிகரிக்க வேண்டும். வியாபாரிகளிடம் காவல் துறையினர் அதிக கெடுபிடி காட்டக்கூடாது. மளிகை, காய்கறி கடைகளை சுழற்சி முறையில் திறக்க அனுமதிக்க வேண்டும்" என்றார்.
தொற்றுப் பரவல் குறையாத நிலையில் தொழிற்துறையினரிடம் அரசு கலந்து ஆலோசித்து முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும். கடைகளில் தனி மனித இடைவெளியை முழுமையாகப் பின்பற்ற வேண்டும். அத்தியாவசியக் கடைகளான காய்கறி , மளிகை கடைகள் தவிர்க்க முடியாது என்பதால் அதை எளிதாக கொண்டு செல்ல மாற்று வழிகளை ஆலோசித்து நல்ல முடிவு எடுக்க வேண்டும் என வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதையும் படிங்க: தஞ்சையில் ஊரடங்கு விதியை மீறிய வாகனங்கள் அதிரடி பறிமுதல்!