சென்னை மெரினாவில் சுந்தரி அக்கா கடை என்ற அசைவ உணவகம் உள்ளது.
பிரபலமான இந்த கடையில் சாப்பிட வரும் வாடிக்கையாளர்களின் இருசக்கர வாகனங்கள் தொடர்ச்சியாக திருடப்பட்டது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
திருடர்கள் பிடிபட்ட கதை :
பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி ஜெய்கிந்த் என்பவர் தனது குடும்பத்துடன் சுந்தரி அக்கா கடையில் சாப்பிடுவதற்காக தனது இரு சக்கர வாகனத்தை மெரினா நீச்சல் குளம் அருகே நிறுத்திச் சென்றுள்ளார்.
சாப்பிட்டு முடித்துவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது தனது இருசக்கர வாகனம் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர், இது குறித்து அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதன்பேரில், மெரினா நீச்சல் குளம் அருகில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமிராவை காவல் துறையினர் ஆய்வு செய்தனர். இதில், இரண்டு கொள்ளையர்கள் கள்ளச் சாவி மூலம் இரு சக்கர வாகனத்தை திருடிச்செல்வதை காவல்துறையினர் கண்டறிந்தனர்.
இது தொடர்பாக, புதுப்பேட்டையைச் சேர்ந்த முகமது நவாசையும், பெரம்பூரைச் சேர்ந்த முகமது ரபீக்கையும் கைது செய்தனர். மேலும் ஜெய்கிந்தின் இரு சக்கர வாகனம் பிரித்து விற்க முயன்ற நிலையில் காவல் துறையினர் கைப்பற்றினர்.
விசாரணையில், இருவரும் சேர்ந்து கடந்த சில ஆண்டுகளாக சுந்தரி அக்கா கடைக்கு சாப்பிட வரும் வாடிக்கையாளர்களின் இரு சக்கர வாகனங்களை திருடிச்சென்றது தெரியவந்தது.
பின்னர், திருடப்பட்ட வாகனங்களை புதுப்பேட்டை பகுதிக்கு கொண்டு சென்று பிரித்து விற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதேபோன்று, கடந்த ஆறு மாதங்களில் அறுபதுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை திருடிச் சென்றுள்ளனர்.
வாகனத்தின் உரிமையாளர்கள் இவர்கள் திருடுவதை கையும் களவுமாகப் பிடித்தால், போதையில் வாகனத்தைத் தவறுதலாக எடுத்து சென்று விட்டதாக நழுவி செல்வதை வழக்கமாக கொண்டிருந்ததாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே மெரினா போன்ற மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளுக்கு இரு சக்கர வாகனங்களில் செல்வோர், தங்கள் வாகனங்களை சங்கிலி பூட்டுகள் பயன்படுத்தி பூட்டிச்சென்றால் திருட்டைத் தடுக்கலாம் என்று காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.