சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கடைகளை முறைப்படுத்த கோரிய வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 900 தள்ளுவண்டி கடைகளை அமைக்கவும், கடைகள் ஒதுக்கீடு தொடர்பாக விண்ணப்பங்களை வரவேற்கவும் சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த 900 கடைகளில் 60 விழுக்காடு கடைகள், ஏற்கெனவே மெரினாவில் வியாபாரம் செய்து வந்தவர்களுக்கும், மீதமுள்ள 40 சதவீத கடைகளை, விருப்பப்படும் மற்றவர்களுக்கு ஒதுக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதன் அடிப்படையில் மெரினாவில் தள்ளுவண்டி கடைகள் ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பங்களை வரவேற்று கடந்த 10ஆம் தேதி சென்னை மாநகராட்சி அறிவிப்பாணை வெளியிட்டது.
இந்த அறிவிப்பாணைக்கு தடை விதிக்க கோரி தமிழ்நாடு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அமைப்புசாரா மற்றும் கட்டுமர மீன்பிடி தொழிலாளர்கள் பாதுகாப்பு பேரவை சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தெரு வியாபாரிகள் பாதுகாப்பு மற்றும் முறைப்படுத்தல் சட்டப்படி, முறையான கணக்கெடுப்புகளை நடத்தாமல், அடையாள அட்டைகளை வழங்கியுள்ளதாக மாநகராட்சி மீது மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
தள்ளுவண்டி கடைகள் ஒதுக்கீட்டுக்கான குலுக்கல் ஜனவரி 6ஆம் தேதி நடைபெற உள்ளதால், 35 ஆண்டுகளாக மெரினாவில் வியாபாரம் செய்து வரும் தங்கள் சங்க உறுப்பினர்களுக்கு பெருத்த பாதிப்பு ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கும், மாநகராட்சிக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜனவரி 8ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க:புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தயார் நிலையில் புதுச்சேரி