சென்னை: ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்டாத்திற்காக சென்னை மெரினா கடற்கரையில் ஏராளமான பொதுமக்கள் கூடுவது வழக்கம். கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளை பரிமாறிக்கொள்வர். அதுமட்டுமின்றி சென்னை காவல் ஆணையர் கேக் வெட்டி, பொதுமக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவிப்பார். ஆனால் இந்த ஆண்டு கரோனா இரண்டாவது அலை பல்வேறு இடங்களில் தொடங்க வாய்ப்புள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்தது.
இதனைத்தொடர்ந்து சென்னையில் அனைத்து சாலைகளிலும் தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுவந்தனர். சென்னை மெரினா கடற்கரை சாலைகளில் பொதுமக்கள் யாரும் வராத வண்ணம் காவல்துறை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

சென்னை மெரினா கடற்கரை மணிக்கூண்டு அருகே புத்தாண்டு பிறக்கும்போது பொதுமக்கள் யாரும் இல்லாமல் சாலைகள் வெறிச்சோடி இருந்தது வரலாற்று நிகழ்வு என்று கூறப்படுகின்றது. பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மட்டும் புத்தாண்டு பிறந்ததும் சக காவலர்களுடன் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.
இதுதொடர்பாக கிழக்கு போக்குவரத்து துணை ஆணையர் செந்தில் குமார் நம்மிடம் பேசும்போது, "பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வந்தால் அறிவுரை கூறி அனுப்பி வைக்கின்றோம். பொதுமக்கள் நன்றாக ஒத்துழைப்பு தருகின்றனர், இந்த தடை காலை 6 மணி வரை தொடரும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: புத்தாண்டு: கோயில்களில் சாமி தரிசனத்திற்கு காலை 6 மணி முதல் பக்தர்கள் அனுமதி!