சென்னை: ஒன்றிய அரசு துறைகளில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அலுவலர்களுக்கானத் தேவை அதிகமாக உள்ளது.
இதனைக்கருத்தில்கொண்டு ஒன்றிய அரசு, மாநில அரசுகளிடம் அயல் பணிகளுக்காக அலுவலர்களை அனுப்பி வைக்க கோரிக்கை வைக்கும். ஆனால், சமீப காலங்களில் மாநில அரசுகள் தேவையான அலுவலர்களை ஒன்றிய அரசுப் பணிகளுக்காக அனுப்பி வைப்பதில்லை என்று ஐஏஎஸ் அலுவலர்கள் பணிச்சட்டத்தில் புதிய திருத்தம் மேற்கொள்ள ஒன்றிய அரசு திட்டமிட்டு உள்ளது.
பொதுவாக அகில இந்திய பதவியான ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அலுவலர்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கப்படும் மாநிலங்களில் பணிபுரிவார்கள். மத்திய அரசு துறைகளுக்குத் தேவையான அலுவலர்கள், மாநிலங்களில் இருந்து அயல்பணியாக அனுப்பப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும்,ஐஏஎஸ் அலுவலர்களை ஒன்றிய அரசுப்பணிகளுக்கு மாற்ற வழிவகை செய்யும் ஐஏஎஸ் கேடர் விதிகள் 1954இல் திருத்தங்களைச் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.
மூன்று முறை மாநில அரசுகளுக்கு அனுப்பப்பட்ட கடிதம்
இதுதொடர்பாக மாநில அரசுகளுக்குக் கடந்த டிசம்பர் மாதம் முதல் இதுவரை மூன்று முறை கடிதங்களை ஒன்றிய அரசு அனுப்பியுள்ள நிலையில், ஒன்றிய அரசுப்பணிகளுக்குச் செல்லத்தயாராக உள்ள அலுவலர்களின் பட்டியலையும் கேட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்தக் கடிதங்களில் மாநில அரசுகள் கருத்து மற்றும் பதில் தெரிவிக்காமல் இருந்தால் அதனை ஒன்றிய அரசு கண்டு கொள்ளாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இந்தத் திருத்த மசோதாவை சில மாநிலங்கள் குறிப்பாக தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளம் எதிர்த்து வந்த நிலையில் இரு மாநில முதலமைச்சர்களான ஸ்டாலின் மற்றும் மம்தா பானர்ஜி, பிரதமர் நரேந்திரமோடிக்கு இந்த திருத்த மசோதாவை நிறைவேற்ற வேண்டாம் என கடிதமும் எழுதியுள்ளனர். இந்தக் கடிதங்களில் ஒன்றிய அரசின் இந்த புதிய சட்டத்திருத்தம் அலுவலர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதனால் அவர்களது திறமை பாதிக்கும் அபாயம் உள்ளது. மேலும், கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராகவும், மாநில அரசுகளின் அதிகாரத்தைப் பறிக்கும் வகையிலும் உள்ளது. இந்த சட்டத்திருத்தத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்த வேண்டியிருக்கும் எனத் தெரிவித்துள்ளனர்.
இந்த திருத்தத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்தால் மாநில அரசு அலுவலர்களை உடனடியாக ஒன்றிய அரசு பணிக்கு மாற்றிவிட முடியும். மாநில அரசின் அனுமதி அல்லது ஒப்புதல் இன்றி ஒன்றிய அரசு பணிக்கு மாற்ற இந்த திருத்த விதிகள் வழிவகை செய்யும்.
முன்னாள் ஐஏஎஸ் அலுவலர்கள் என்ன சொல்கிறார்கள்?
எம்.ஜி தேவசகாயம்
"மத்திய அரசு இந்த திருத்தத்தைக் கொண்டு வந்தால் இது தேசிய ஒருமைப்பாட்டை சீரழிக்கும். ஏனெனில், ஒரு ஐஏஎஸ் அலுவலர் வேறு இடத்திற்கு மாற்றம் செய்யும்போது அந்த அலுவலரை, மாநில அரசு விரும்ப வேண்டும்.
மேலும் ஐஏஎஸ் அலுவலர்களைத் தேர்வு செய்யும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) என்பது ஒரு தன்னாட்சி அமைப்பு. இதில் மத்திய அரசு தலையிட முடியாது.
ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அலுவலர்கள் நாட்டை ஒருங்கிணைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். எனவே மத்திய அரசு இந்த திருத்தத்தைக் கொண்டு வந்து அலுவலர்களைக் கட்டாயப்படுத்தி பணிமாற்றம் செய்தால், இது நாட்டை மட்டுமல்லாமல் ஒருமைப்பாட்டுக்கும் கேடு விளைவிக்கும்."
பி.டபிள்யு.சி டேவிதார்
"மத்திய அரசு இந்த திருத்தத்திற்குப் பதிலாக ஐஏஎஸ் அலுவலர்களை மாற்றுவதற்கு நன்கு திட்டமிட்டு வேறு முறையை கையாளலாம்.
அதாவது அலுவலர்கள் பணியாற்றிய குறிப்பிட்ட ஆண்டுகள், திறமை உள்ளிட்டவையை வைத்து மாநில அரசுகளை அணுகி அலுவலர்களின் சம்மதத்துடன் அவர்களை மாற்றலாம்.
மாறாக அலுவலர்களைக் கட்டாயப்படுத்தி மாற்றம் செய்வது மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிப்பதாகும்" எனத் தெரிவித்தனர்.