கடந்த செப்டம்பர் மாதம், வெளிநாடுவாழ் தமிழர்கள் ஒருங்கிணைத்த இணைய வழிக் கருத்தரங்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், மனு ஸ்மிருதி நூலில் பெண்கள் குறித்து இழிவாக கூறியிருப்பதாகக் கூறி அதிலிருந்து சில ஸ்லோகங்களை எடுத்துரைத்துப் பேசியிருந்தார்.
அதனை பாஜகவினரும், சில இந்துத்துவ அமைப்புகளும் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினர். இதற்கு எதிர்வினையாக கடந்த அக்டோபர் 24ஆம் தேதியன்று ’மனு ஸ்மிருதி எனும் சனாதன நூலை மத்திய, மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும்’ என விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. இதற்கிடையே, மனு ஸ்மிருதிக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு கருத்துகள் சமூக வலைதளங்களிலும், பொது வெளிகளிலும் பகிரப்பட்டு வந்தன.
![மனு ஸ்மிருதி குறித்த கமல் கருத்து - சு.வெங்கடேசன் எம்.பி. விமர்சனம்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/9441043_svk.jpg)
இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன், மனு ஸ்மிருதி புழக்கத்தில் இல்லாத ஒன்று என்றும், அதைப் பற்றி பேசுவது அவசியமற்றது என்றும் தெரிவித்தார். அவருக்கு பதிலளிக்கும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில், மனு ஸ்மிருதி புழக்கத்தில் இல்லை என்று சொல்வது ஆமையின் கழுத்தில் கயிறு கட்டி இழுத்துச்செல்லப்பட்ட கப்பலின் கதையைவிட பயங்கரமாக இருக்கிறது என விமர்சித்துள்ளார். மேலும், மனு ஸ்மிருதியை புறக்கணிக்க வேண்டும் எனவும் தனது பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மருத நாயகம் திரைப்படத்திற்காக கமல் எழுதிய பாடலையும், அந்தப் பாடலின் வரிகள் தற்போதைய நடைமுறைக்கும் பொருந்திப்போவது தமிழ் இனத்திற்கே பெரும் அவமானம் எனக் குறிப்பிட்டும், அவர் முன்னர் ட்வீட் செய்ததை பலரும் மீள் பதிவிட்டு வருகின்றனர்.
’மதங்கொண்டு வந்தது சாதி – இன்றும் மனிதனைத் துரத்துது மனு சொன்ன நீதி. சித்தம் கலங்குது சாமி – இங்கு ரத்த வெறி கொண்டு ஆடுது பூமி’ என்ற வரிகள் மருத நாயகம் திரைப்படத்திற்காக மனு ஸ்மிருதியை குறிப்பிட்டு கமல் ஹாசன் எழுதிய பாடல் வரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மனுஸ்மிருதி விவகாரம்: 15 ஆண்டுகள் கழித்து திருமாவை பழிதீர்க்க நினைக்கிறாரா குஷ்பு?