சென்னை: கோயம்பேடு மொத்தக் காய்கறிகள் விற்பனை நிலையத்தில், சாக்கடை அடைப்புகளை மனிதர்களைக் கொண்டே சுத்தம் செய்ய கட்டாயப்படுத்துவதாகவும், அவ்வாறு பணியில் ஈடுபடுத்தப்படும் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் ஏதும் வழங்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.
ஆனால், மழைநீர் வடிகால் பணிக்காக மட்டுமே தொழிலாளர்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், மனிதக் கழிவுகளை அள்ள பயன்படுத்தப்படவில்லை எனவும் கோயம்பேடு நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இவ்விவகாரத்தில் மனிதர்களைக் கொண்டே கழிவுகளை அகற்ற பயன்படுத்திய நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது எனச் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் செயலாளர் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இது நாளிதழிலும் செய்தியாக வெளியானது.
இந்தச் செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் விசாரணைக்கு எடுத்தது. வழக்கை இன்று (அக். 1) விசாரித்த மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ், மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலை தொடர்கிறதா என ஆய்வுசெய்து சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும நிர்வாக இயக்குநர் ஆறு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தனியார் ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடிய நபரை தாக்கிய காவலர்கள் - ரூ.3 லட்சம் அபராதம்