சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் புதிய 7 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில்,
1. பசுமைப் பள்ளிக்கூடத் திட்டம் :
காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ளவும் , அதன் பாதிப்புகளை தணிப்பதற்கும் சிறார்களை தயார் செய்ய வேண்டியுள்ளது. பசுமை இயக்கத்தை நடைமுறைப் படுத்துவதற்காக 25 பசுமைப் பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளன. மேலும் இதற்கு 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2. தமிழ்நாட்டில் மாவட்ட அளவில் காலநிலை மாற்ற இயக்கம் :
தமிழ்நாடு போன்ற கடலோர மாவட்டத்தில் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை எதிர்த்து போராடுவதும் அவற்றின் பாதிப்புகளை தணிப்பதும் மிகவும் கவனம் செலுத்தப்பட வேண்டிய அம்சமாகும். தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தினை மேலும் வலுப்படுத்துவதற்கு மாவட்ட அளவில் காலநிலை மாற்றத்திற்கான அலகு ஒன்று மாவட்டங்கள் தோறும் ஏற்படுத்தப்படும்.
இதற்கு மாவட்ட ஆட்சியர் தலைவராகவும், மாவட்ட வன அலுவலர் ஒருங்கிணைப்பாளராக இருப்பதோடு காலநிலை மாற்ற அலுவலராகவும் செயல்படுவார். மேற்கூறிய திட்டத்துக்காக தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் மேலாண்மை முகமையால் 3.80 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
3. மீண்டும் மஞ்சப்பை எக்ஸ்பிரஸ் :
ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் நெகிழியின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக முதலமைச்சர் தொடங்கி வைத்த ‘மீண்டும் மஞ்சப்பை’ பிரசாரத்தை மேலும் வலுப்படுத்தி அடிமட்ட அளவுக்கு கொண்டு செல்வதற்காக ‘மீண்டும் மஞ்சப்பை எக்ஸ்பிரஸ்-ரயில் கண்காட்சி’ என்ற திட்டம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய நிதியிலிருந்து 13 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.
4. தொழிற்சாலைகளை பசுமை மதிப்பீடு செய்தல் :
இத்திட்டம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய நிதியிலிருந்து 2.5 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.
5. புதிய மாவட்ட சுற்றுச்சூழல் ஆய்வகங்களை உருவாக்குதல்:
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தில் மேலும் புதிய நெருக்கடிகளை எதிர்கொள்ள தயாராகவும் அனைத்து வசதிகளுடன் கூடிய இரண்டு புதிய ஆய்வகங்கள் ஒரகடம் மற்றும் நாகப்பட்டினத்தில் 6 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படும்.
6. கோயம்பேடு சந்தை வளாகத்தை கரி மாசு இல்லாத வளாகமாக உருவாக்குதல் :
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், சென்னை பெருநகர மாநகராட்சி ஆகியவை இணைந்து 25 கோடி ரூபாய் செலவில் கோயம்பேடு சந்தை வளாகத்தை கரி மாசு இல்லாத வளாகமாக உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
7. பள்ளி, கல்லூரிகளுக்கு மஞ்சப்பை விருதுகள் வழங்குதல் :
தமிழ்நாட்டில் நெகிழி இல்லா வளாகங்களை உருவாக்கும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்களை ஊக்குவிக்க தமிழ்நாடு அரசு மஞ்சப்பை விருதுகளை வழங்க முடிவு செய்துள்ளது. வரையறுக்கப்பட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு 3 கல்லூரிகள், மூன்று பள்ளிகள் மற்றும் மூன்று வணிக நிறுவனங்கள் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்படும்.
இத்திட்டங்களின் கீழ் சிறந்த பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசாக 10 லட்சம் ரூபாயும், இரண்டாவது பரிசாக 5 லட்சம் ரூபாயும், மூன்றாவது பரிசாக 3 லட்சம் ரூபாயும் வழங்கப்படும். இத்திட்டத்திற்காக 54 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: முதலமைச்சர் ஸ்டாலினை புகழ்ந்த பாஜக எம்எல்ஏ!