சென்னை: மாஞ்சா நூல் பட்டத்தால் பல்வேறு உயிர் இழப்புகளும், காயமடைந்து ஊனமடையும் நிலையும் ஏற்பட்டதால் கடந்த 2007ஆம் ஆண்டு சென்னையில் மாஞ்சா நூல் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. மேலும் தடை உத்தரவை மீறி மாஞ்சா நூல் விற்பனை மற்றும் பயன்படுத்துவோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இருந்த போதிலும் மாஞ்சா நூல் விற்பனை மற்றும் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.
குறிப்பாக சென்னையில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் மாஞ்சா நூலில் பட்டம் விட்டதாக 81 வழக்குகளை போலீசார் பதிவு செய்து, 86 பேரை கைது செய்துள்ளதாகவும், அதிகபட்சமாக வடக்குப் பிரிவில் மட்டும் 49 வழக்குகள் பதிவு செய்திருப்பதாகவும் புள்ளி விவரங்களில் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
இதில் 4 நபர்கள் காயமடைந்து, உயிரிழப்புகள் நிகழவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாஞ்சா நூல் விற்பனை செய்த கடையிலிருந்து 2,195 மீட்டர் மாஞ்சா நூல் மற்றும் 143 பட்டங்களைப் பறிமுதல் செய்துள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையினால் சென்னையில் கடந்த காலங்களில் மாஞ்சா நூல் விற்பனை மற்றும் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைந்ததால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டது.
இந்த நிலையில் மீண்டும் சென்னையில் மாஞ்சா நூலில் பட்டம் விடும் கலாசாரம் தலை தூக்கி உள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் மூன்று வெவ்வேறு இடங்களில் மூன்று வாகன ஓட்டிகளின் கழுத்தை மாஞ்சா நூல் பதம் பார்த்துள்ளதால் அவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 12ஆம் தேதி தரமணியைச் சேர்ந்த குணசீலன்(30), தாமஸ் மவுண்ட் மாங்காளியம்மன் கோவில் தெரு வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றபோது மாஞ்சா நூல் கழுத்தில் சிக்கி காயமடைந்தார்.
இதேபோல தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலையில் இளைஞர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, மாஞ்சா நூல் அவரது கழுத்தை அறுத்ததில் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
இதுதொடர்பாக மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மதுரவாயல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாஞ்சா நூலில் காற்றாடி பறக்கவிட்ட துரைமாணிக்கம்(45), பாலாஜி, கணேசன், வேல், ஹரிகிருஷ்ணன், முரளி ஆகிய 6 நபர்களை கைது செய்தனர். மேலும் செரியன் என்பவர் பணி முடிந்து தனது பெண் தோழியுடன் பைக்கில் அண்ணாசாலை விஜயராகவா சாலையில் திரும்பும்போது மாஞ்சா நூல் செரியன் கழுத்தை அறுத்தது.
இதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பெண் தோழிக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அறுபட்டு காயமடைந்த செரியனை அவரது பெண் தோழி மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். செரியனை பரிசோதித்த மருத்துவர்கள் 4 செ.மீ அளவுக்கு கழுத்து அறுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இதுதொடர்பாக பேசிய பாதிக்கப்பட்ட நபர்கள், மாஞ்சா நூலில் பட்டம் விடுவோர் மற்றும் விற்பனை செய்பவர்களைப் பிடித்து காவல்துறை அபராதம் விதிப்பதோடு மட்டுமின்றி, அவர்களை சிறையில் அடைக்க வேண்டும் எனவும், பட்டம் விடும் நபர்களின் பெற்றோர்களை அழைத்து கண்டிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மாஞ்சா நூலை ஆன்லைன் மூலமாக விற்பனை செய்வதையும், கொரியர் நிறுவனம் மூலமாக விற்பனை செய்வதையும் தொடர்ச்சியாக கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் சிறுவர்கள் மாஞ்சா நூலில் பட்டம் விட்டால் அவர்களது பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: CSK vs RR: அதிரும் ஜெய்ப்பூர்: ராஜஸ்தானை அலற விடுமா 'விசில்' சத்தம்?