மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், " தமிழ் மொழியின் வளர்ச்சியில் உலக நாடுகளில் பல்வேறு பல்கலைக்கழகங்களும் முக்கியப் பங்கு வகிக்கும் ஜெர்மனியின் கொலோன் பல்கலைக்கழகத்தில் இந்தியவியல், தமிழியல் ஆய்வு நிறுவனம் 1963ல் தொடங்கி நடைபெறுகிறது. இந்த ஆய்வு நிறுவனம், தெற்காசிய நாடுகள், கிழக்காசிய நாடுகள் பண்பாட்டியல், மொழிகள் துறையுடன் இணைக்கப்பட்டு செயல்படுகிறது.
பெரிய நூலகங்களில் கொலோனும் ஒன்று
தமிழ்நாட்டிற்கு வெளியே உள்ள இரண்டு பெரிய நூலகங்களில் சிகாக்கோவுடன், கொலோனும் ஒன்றாக உள்ளது. இதில், ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பழம்பெரும் தமிழ் நூல்களும் ஓலைச்சுவடிகள் ஆய்விற்காக சேகரிக்கப்பட்டுள்ளன.
தமிழ் பிரிவு மூடமால் இருக்க நிதி திரட்டிய அமெரிக்க வாழ் இந்தியர்கள்
2014 இல் கொலோன் பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் எடுத்த முடிவின்படி, பேராசிரியரான உல்ரிக்க நிக்லாஸ், செப்டம்பர் 2020இல் ஓய்வு பெற்ற பின் தமிழ் பிரிவை மூடுவதாக அறிவிக்கப்பட்டது. மீண்டும் தமிழ் பிரிவை இயக்கத் தேவையான நிதியின் பாதியை அமெரிக்க வாழ் இந்தியர்கள் திரட்டி பல்கலைக்கழகத்திற்கு அளித்ததால் தமிழ் பிரிவை மூடும் முடிவு ஜூன் 2022 வரை ஒத்தி வைக்கப்பட்டது.
அதிமுக அரசின் பல அறிவிப்புகளில் ஒன்றான நிதி அளிப்பு
இதன் மற்றொரு பாதி தொகையான ரூ.1 கோடியே 24 லட்சத்தினை தமிழ்நாடு அரசு அளிப்பதாக 2019இல் கூறி உள்ளது. இதை கொலோன் தமிழ் வளர்ச்சிக் கழகத்தினரும் உறுதி செய்துள்ளனர். கடந்த ஆட்சியில் இந்த தொகைக்கு அளிக்க கொள்கை ரீதியான முடிவும் எடுக்கப்பட்டிருந்தது. ஆனால் வெறும் அறிவிப்புடன் நின்று விட்ட அதிமுக அரசின் பல அறிவிப்புகளில் இதுவும் ஒன்றாக மாறி கொலோன் பல்கலைக்கழகத்திற்கு அனுப்ப வேண்டிய தொகை இன்னும் அளிக்கப்படாமல் உள்ளது.
ஐரோப்பிய தமிழர்கள் கூட்டமைப்பு மூலம் நிதி திரட்டல்
கடந்த மார்ச் மாதத்துடன் அமெரிக்க வாழ் இந்தியர் அளித்த தொகையும் தீர்ந்தமையால் தமிழுக்கான நிதித்தொகை பற்றாக்குறையில் சென்று கொண்டிருக்கிறது. இதை சமாளிக்க ஜெர்மனியின் 8 நகரத் தமிழர்கள் இணைந்து ’ஐரோப்பிய தமிழர்கள் கூட்டமைப்பு’ எனும் அமைப்பைத் தொடங்கி 12 நாட்டினருடன் இணைந்துள்ளனர். அவர்கள் சுமார் 32,000 டாலர் நிதி திரட்டியுள்ளனர். இதை கொலோன் பல்கலைக்கழகத்திற்கு அளித்து சமாளித்து வருகின்றனர்.
கொலோன் பல்கலைக்கழகத்திற்கு நிதி வழங்கு
எனவே, தமிழ்நாடு அரசு தருவதாக உறுதி அளித்த ரூபாய் 1 கோடியே 25 லட்சம் தொகையினை அளித்து கொலோன் பல்கலைக்கழக தமிழ்த் துறை மூடாமல் இருக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதம் வாயிலாக கோரிக்கை வைத்துள்ளேன்.
ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக அயராது உழைத்து வரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மனிதநேய மக்கள் கட்சியின் கோரிக்கையை ஏற்று கொலோன் பல்கலைக்கழக தமிழ் பிரிவு தொடர்ந்து இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.