சென்னை: பிறந்தோம் இறந்தோம் என்று இல்லாமல் நாம் வாழ்ந்த காலத்தை வரலாறு பேச வேண்டும், அப்படி வரலாறு படைத்தவர் தான் இமானுவேல் சேகரனார். முதுகுளத்தூர் கலவரம் வரலாற்றில் மறக்கமுடியாத மறுக்கமுடியாத ஒரு சம்பவம். ஓடுக்கப்பட்ட மக்களின் குரல் ஓங்கி ஒலிக்க காரணமாக இருந்ததும் அந்த சம்பவம் தான், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தவனின் குரல் அடங்கியதும் இங்கு தான்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம் அருகே உள்ள செல்லூர் எனும் கிராமத்தில் 1924 அக்டோபர் 9 ஆம் தேதி ஒடுக்கப்பட்ட மக்களை ஒன்றிணைக்க ஒரு உயிர் இம்மண்ணில் பிறந்தது. அவருடைய பெற்றோருக்கு அப்போது தெரியவில்லை நம்முடைய மகன் போரட்ட களத்திலும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவே இவன் பிறந்திருக்கிறான் என. இவருடைய தொடக்கப் பள்ளியை டி.இ.எல்.சி பள்ளியிலும், உயர் கல்வியை ராமநாதபுரம் சுவார்ட்சு உயர்நிலைப் பள்ளியிலும் கற்றார்.
இந்திய நாட்டின் மீது அதீத பற்றுக் கொண்டிருந்த இவர், படிக்கும்போதே தனது 18 வயதில் 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் பங்கேற்று தனது 18 வயதிலேயே மூன்று மாதங்கள் சிறை தண்டனையை அனுபவித்தார். சிறைக்குச் சென்ற காரணத்தினால் இவருக்கு கல்வி நிறுவனங்களில் அனுமதி மறுக்கபட்டது.
அதன் பிறகு நாட்டின் மீது கொண்ட பற்றால் 1945ஆம் ஆண்டில் ராணுவத்தில் இணைந்தார். அங்கிருந்து 3 ஆண்டுகள் பிரிட்டிஷ் இந்திய ராணுவத்திலும், 5 ஆண்டுகள் சுதந்திர இந்திய ராணுவத்திலும் பணியாற்றினார். இருந்த போதிலும் ராமநாதபுரம் பகுதி வாழ் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் வாழ்நிலையை கருத்தில் கொண்டு 1952ஆம் ஆண்டு தனது ராணுவ பணியிலிருந்து வெளியேறினார். ராணுவத்திலிருந்து வெளியேறிய இவர் நேரடியாக சமூக போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
அன்றைய தமிழ்நாடு அரசியல் களம் என்பது மிகவும் கவனிக்கத்தக்க ஒன்றாக இருந்தது. அப்போது இருந்தவர்கள் எல்லாம் இளம் வயது வேட்பாளர்கள். காங்கிரஸ் இயக்கத்தைச் சேர்ந்த ராஜாஜி குலக்கல்வியை கொண்டு வந்தபோது அதற்கு எதிராக கையெழுத்து இயக்கத்தை நடத்தியவர் இமானுவேல் சேகரனார். அதை தொடர்ந்து தமிழ்நாட்டில் மதுவிலக்கை கொண்டு வந்ததால் அரசுக்கு அதீத இழப்பு ஏற்பட்டுவிட்டது என கூறி கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளை மூடுகிறோம் என ராஜாஜி முடிவு எடுத்தார்.
அதன் பின்னர், கிருஸ்துவ நிறுவனங்களுக்குச் சொந்தமான பள்ளிகளுக்கு எதிராக போராட்டங்கள் நடந்தபோது 'ஒடுக்கப்பட்ட சமூகத்தின் குழந்தைகளே பள்ளிகளை நோக்கி புறப்படுங்கள்' என பரமக்குடி, ராமநாதபுரம், கமுதி ஆகிய பகுதிகளில் பரப்புரையை மேற்கொண்டவர் இமானுவேல் சேகரனார்.
அதைத் தொடர்ந்து 1953ஆம் ஆண்டில் ஒடுக்கப்பட்டோர் இளைஞர் இயக்கத்தை உருவாக்கி, அனைத்து ஒடுக்கப்பட்ட சமூகங்களையும் உள்ளடக்கியதாக இவரின் சமூக விடுதலை போராட்டங்களாக இவரது போராட்டங்கள் உருவெடுத்தன. அம்பேத்கரின் பிறந்தநாளன்று ராமநாதபுரத்தில் ஒடுக்கப்பட்டோருக்கான எழுச்சி இயக்க மாநாடு ஒன்றை நடத்தி, அதில் சாதிகளுக்கான இணக்கம், விதவை மறுமணம் உள்ளிட்ட 7 முக்கிய தீர்மானங்களை மாநாட்டில் நிறைவேற்றினார்.
தீண்டாமை நிலவும் ஊர்களுக்கு நேரடியாக சென்று மக்களைச் சந்தித்து சட்ட போராட்டங்களையும் மேற்கொண்டார். தொடர்ந்து தீண்டாமைக்கு எதிராக பரப்புரை நடத்த ‘பெட்ரோமாக்ஸ்' விளக்கு ஏந்தி ஊர்கள் முழுக்க மக்களை ஒன்று திரட்டி கூத்து, நாடகங்கள் மூலம் பரப்புரை செய்தார். 1954ஆம் ஆண்டில் இரட்டை குவளை ஒழிப்பு மாநாட்டை அருப்புக்கோட்டையில் நடத்தினார். இப்படி ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து, இவர் ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவராக பார்க்கப்பட்டார்.
1957ஆம் ஆண்டில் காடமங்கலம் பகுதி மற்றும் லாவி என்ற கிராமத்தில் நடைபெற்ற கலவரம் காரணமாக கலவரத்தை தடுக்க அனைத்து சமூக தலைவர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் தரப்பிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் கலந்து கொண்ட இமானுவேல் அடுத்ததாக ( 12-9-1957 ) அன்று பரமக்குடியில் பள்ளி ஒன்றில் நடைபெற்ற பாரதியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இமானுவேல் அன்றிரவு வீடு திரும்பும்போது சமூக விரோதிகளால் அவர் வெட்டி படுகொலை செய்யப்படுகிறார்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்த இமானுவேல் படுகொலை செய்யபட்டார் என்ற செய்தி தமிழ்நாடு முழுவதும் அன்று அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடைகள், வீடுகள், போக்குவரத்து என அனைத்துமே அன்றைய தினம் அடைக்கப்பட்டன. பலத்த காவல் துறை பாதுகாப்புடன் இமானுவேல் சேகரனாரின் உடல் அடக்கம் செய்யப்பட்டாலும், அப்போது மயானத்திற்குச் செல்லும் பாதை துண்டிக்கபட்டதால் ராமநாதபுர மாவட்டம் முதுகுளத்தூரில் இரு தரப்பினர் மோதி கொள்ளவே அது கலவரமாக மாறியது. 18 வயதில் தொடங்கிய ஒரு இளைஞனின் புரட்சி, எழுச்சி பயணம் 33 வயதில் சாதிய படுகொலையாக முடிவு பெறுகிறது.
இமானுவேல் சேகரனார் பற்றி எழுத்தாளர் ஜெகந்நாதன் கூறியதாவது, “ஒட்டுமொத்தமான தலித் இயக்கங்களில் அசைவு இயக்கம் என்பது முதுகுளத்தூர் கலவரத்திற்கு பிறகு ஒரு உத்வேகத்தை தலித்துக்களுக்கு கொடுத்தது. ஏராளமான கல்வி செயல்பாடுகள், அரசு வேலை, அமைச்சு வேலை என்பதான பயணத்தை மேற்கொள்வதற்கான ஒரு உந்து சக்தியாக முதுகுளத்தூர் கலவரம் இருந்தது.
குறிப்பிட்ட சமூகத்தினர் அவரை தன்னுடைய அடையாளமாக எடுத்து கொண்டனர். இது இயல்பாக நடக்க கூடிய ஒன்றுதான், ஆனால் அவர்கள் இமானுவேல் சேகரனாரை கையில் வைத்துக் கொண்டு மற்றொரு சாதியினர் மீது அடக்குமுறையை திணிப்பது, நீ எனக்கு கீழ் தான் என்பது போன்ற செயல்பாடுகளை அவர்கள் செய்யவில்லை” என கூறினார்.
மேலும், “சுதந்திரத்திற்குப் பிறகு நடைபெற்ற தேர்தல் என்பது ஒரு திருவிழா போல நடைபெற்றது. அதில் தலித்துகளுக்கென்று தனித்தொகுதி பிரிக்கபடுகிறது. அங்கு தலித்துகள் தங்களுக்கான வேட்பாளர் யார் என தேர்ந்தெடுப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். அப்போது தான் ஆதிக்க சாதியின் அடக்குமுறையை எதிர்த்து இமானுவேல் சேகரனார் மேலெழுகிறார். அதிலிருந்து தான் தேர்தலில் தலித்துகள் ‘என்னுடைய வாக்கு என்னுடைய உரிமை’ என்பது முன்வைக்கும் போது தான் இமானுவேல் சேகரன் படுகொலை செய்யபடுகிறார்” என்றார்.
இத்தகைய நிலையில் தான், தற்போது தியாகி இம்மானுவேல் சேகரனாருக்கு ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. முன்னதாக தியாகி இமானுவேல் சேகரனாருக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்பட வேண்டும் என அவரது குடும்பத்தினரும், அப்பகுதி மக்களும் முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அவர்களது கோரிக்கையினை நிறைவேற்றிடும் வகையில், தியாகி இம்மானுவேல் சேகரனாரின் சமூக பங்களிப்பினைப் போற்றும் வகையில் அவரது பிறந்தநாள் நூற்றாண்டினையொட்டி அன்னார் நல்லடக்கம் செய்யப்பட்ட ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் தமிழ்நாடு அரசின் சார்பில் கட்டப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: Immanuel Sekaran : தியாகி இம்மானுவேல் சேகரனாருக்கு மணிமண்டபம்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!