மெரினா கடற்கரை, டிஜிபி அலுவலகம் அருகே, நேற்று (ஜூலை.06) இரவு வட மாநிலத்தைச் சார்ந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கையில் கத்தியுடன் பொது மக்களை அச்சுறுத்தி வருவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதனைத் தொடர்ந்து அங்கு காவல் துறையினர் சென்ற நிலையில், அவர்களைக் கண்டதும் அந்நபர் ஆவேசமாக கத்தியால் தாக்க முற்பட்டுள்ளார். தொடர்ந்து அவரைப் பிடித்து வந்து காவல் நிலையத்தில் வைத்து காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் அவர் நேபாளத்தைச் சேர்ந்த அஜித் கவுதம் என்பதும், பெருங்குடி பகுதியில் கூர்கா வேலை செய்து வருபவர் என்பதும் தெரிய வந்தது. அவர் பயன்படுத்திய கத்தி கூர்கா பயன்படுத்தும் கூர்வாள் என்பதும் விசாரணையில் தெரிய வந்த நிலையில், மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் அஜித் கவுதம் நடந்து கொள்வதாக உறவினர்களுக்கு காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இந்நிலையில் அஜித் கவுதம் பயன்படுத்திய கூர்வாள் பறிமுதல் செய்யப்பட்டு, காவல் துறையினர் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: இந்தியாவின் நீண்ட நாள் விருந்தாளி நான்- தலாய் லாமா!