சிங்கப்பூரிலிருந்து சென்னை வந்த சிறப்பு மீட்பு விமானத்தில் 21.16 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 374 கிராம் தங்கக் கட்டியை கடத்திக் கொண்டு வந்த நபர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
சிங்கப்பூரிலிருந்து 134 இந்தியா்களுடன் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் மீட்பு விமானம் சென்னை வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத் துறையினா் சோதனையிட்டனா். அப்போது திருச்சியைச் சோ்ந்த 32 வயது ஆண் ஒருவா் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையிலும், முன்னுக்குப் பின் முரணாகவும் பேசியுள்ளார்.
இதையடுத்து அவரது உடமைகள் சோதனையிடப்பட்டது. அப்போது அவருடைய பையினில் பிளாஸ்டிக் குழாய்களை அறுக்கப் பயன்படுத்தும் ஆங்கிள் கிரைண்டா் ஒன்று இருந்துள்ளது.
இதையடுத்து அலுவலர்கள் அதனைக் கழற்றி பாா்த்தனா். அப்போது அதற்குள் 374 கிராம் எடையுடைய தங்கக் கட்டி ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதன் சர்வதேச மதிப்பு 21.16 லட்சம் ரூபாய் ஆகும்.
அதனைத் தொடர்ந்து சுங்கத் துறையினா் அந்நபரை கைது செய்து தங்கத்தை பறிமுதல் செய்தனா். நான்கு மாதங்களாக சிங்கப்பூரில் தவித்தவா் மீட்கப்பட்டு இந்தியா திரும்புகையில், கடத்தல் தங்கத்தோடு வந்து கைதாகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க...சென்னை விமான நிலையத்தில் ரூ.1.65 கோடி போதைப் பொருள்கள் பறிமுதல்!