சென்னை தாம்பரம் பேருந்து நிலையத்தில் இளைஞர் ஒருவர் கல்லூரி மாணவர்களுக்குப் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த புகாரைத் தொடர்ந்து காவல் துறையினர் அங்குத் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த இரண்டு மாணவர்கள், ஒரு இளைஞரைப் பிடித்து விசாரணை நடத்தியதில், அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, மூன்று பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டதில், இரண்டு மாணவர்கள் ஐடிஐ படித்து வருபவர்கள் என்றும், மற்றொரு இளைஞர் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு போதைப் பொருள் விற்பதும் தெரியவந்தது. இதையடுத்து மாணவர்கள் இருவரையும் மட்டும் கண்டித்து காவல் துறையினர் வீட்டிற்கு அனுப்பிவிட்டனர் .
பின் பிடிபட்ட இளைஞரிடம் போதைப் பொருள் எப்படிக் கிடைத்தது, எங்கிருந்து வாங்கப்பட்டது என்பன உள்ளிட்டவை குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள தாம்பரம் பேருந்து நிலையத்தில் நடந்த போதைப் பொருள் விற்பனை அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 7 பேர் கைது