சென்னை: திருவல்லிக்கேணி ஹைரோட்டில் காவல் நிலையம் எதிரே, அரசு மதுபானக் கடை ஒன்று இயங்கி வருகிறது.
அந்தக் கடைக்கு நேற்று (ஜூலை 11) வந்த நபர் ஒருவர் 100 ரூபாய் நோட்டுகள் 4 கொடுத்து மதுபானம் வாங்கியுள்ளார்.
அப்போது கடை ஊழியர் அந்த நோட்டுக்களை பார்த்த போது கள்ளநோட்டு எனத் தெரியவந்தது. இதனையடுத்து உடனடியாக அந்த நபரை பிடித்து அருகேயுள்ள திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஒப்படைத்து, டாஸ்மாக் விற்பனையாளர் ராமன் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் அந்த நபரிடம் நடத்திய விசாரணையில், அவர் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த அப்துல் ரஷித் (54) என்பதும், தற்போது திருவல்லிக்கேணி லாட்ஜில் தங்கி புடவைக்கு என்பிராயிடரி போடும் தொழிலை செய்து வருவதும் தெரியவந்தது.
மேலும் தான் கொடுத்த ரூபாய் நோட்டுகள் பரோட்டா சாப்பிட்ட கடையில் கொடுத்ததாக தெரிவித்தார். இதனையடுத்து பரோட்டா கடைக்கு சென்று விசாரித்த போது அது உண்மையில்லை எனத் தெரியவந்தது.
இதனையடுத்து அப்துல் ரஷித் தங்கிய லாட்ஜில் காவல் துறையினர் சென்று சோதனையிட்டனர். அப்போது அங்கு கள்ள நோட்டுகள் எதுவும் சிக்கவில்லை. பின்னர் 400 ரூபாய் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்து, அப்துல் ரஷித் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை நீதிமன்றம் முன்நிறுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: சங்கரய்யா 100ஆவது பிறந்தநாள் - அரசு விழாவாக கொண்டாட கோரிக்கை