சென்னை: கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் உணவுத்துறை அமைச்சராகப் பதவி வகித்த காமராஜ் தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக பருப்பு, எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கொள்முதல் செய்ததில் சுமார் 350 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு செய்துள்ளதாக அளித்த புகாரின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான புகழேந்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி எ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் புகழேந்தி தரப்பில் வழக்கறிஞர் ஆர்.திருமூர்த்தி ஆஜராகி, பருப்பு, எண்ணெய் போன்ற பொருட்கள் அதிக விலைக்குக் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த முறைகேடு குறித்து 2018 ஆம் ஆண்டு புகார் அளித்ததாகவும், இதற்கு 2022ஆம் ஆண்டு முதல் விரிவான விசாரணை நடந்து வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளித்ததாகவும் தெரிவித்தார்.
மேலும், லஞ்ச ஒழிப்புத்துறை விதிகளின்படி ஆறு மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும் என்பதால் இந்த வழக்கில் உடனடியாக விசாரணையை முடித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதனை அடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில், மனுதாரர் புகழேந்தி போல மேலும் இருவர் இதே புகாரைத் தெரிவித்துள்ளதாகவும், அந்த புகார்கள் தொடர்பாகவும் ஆரம்பக் கட்ட விசாரணை நடத்தி, தற்போது விரிவான விசாரணையைத் துவங்கி உள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும், அதிகாரிகளிடம் விசாரணை நடத்த வேண்டி உள்ளது என்றும் 31 டெண்டர் ஆவணங்களை ஆய்வு செய்து உண்மையான இழப்பைக் கண்டறிய வேண்டி உள்ளது என்றும் விசாரணை முடியும் முன்பு மனுதாரர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார் என்றும் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இருதரப்பின் வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, மனுதாரர் அளித்த புகாரின் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டு மனு மீதான விசாரணையை நவம்பர் 15 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
இதையும் படிங்க: திருமணத்திற்கு மீறிய உறவால் நடந்த கொலை! 5 பேருக்கு ஆயுள் தண்டனை - நீதிமன்றம்!