சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியில் ஒழுங்கு நடவடிக்கைகளை முறைப்படுத்தும் வகையில், ஒழுங்கு நடவடிக்கை கமிட்டியை உருவாக்கியுள்ளது. இதன் உறுப்பினர்களாக, M.V.பாஸ்கர், ம.நீ.ம. சட்ட ஆலோசகர், A.G.மௌரியா, துணைத்தலைவர், P.ஷண்முக ராஜன், மாநில கூடுதல் செயலாளர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கமிட்டியின் நோக்கம்: கட்சியின் நலன்களைப் பாதிக்கும் விதமாக நடந்துகொள்பவர்கள் மீது நியாயமான காரணங்கள் மற்றும் ஆதாரங்களுடன் புகார் அளித்தால், ஜனநாயக முறைப்படி நேர்மையான, வெளிப்படையான விசாரணையை மேற்கொண்டு, உண்மை நிலையைக் கண்டறிந்து தலைவருக்கு பரிந்துரைப்பார்கள்.
குழுவின் நடைமுறை: புகார்கள் தகுந்த ஆதாரங்களுடன் எழுத்துப்பூர்வமான கடிதம் அல்லது மின்னஞ்சல் (grievancecell@maiam.com) வடிவில் ஒழுங்கு நடவடிக்கைக் கமிட்டிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இரண்டு தரப்பினரின் விளக்கங்களையும் கேட்டறிந்த பிறகு, ஆதாரங்களை சரிபார்த்த பிறகு, ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி இதற்கான தீர்வாக விளக்கம் கோரும் அறிவிப்பையோ (ஷோ காஸ் நோட்டீஸ்), அல்லது நேரடியாக தற்காலிகப் பதவி நீக்கத்தையோ, அல்லது குற்றச்சாட்டின் உண்மைத்தன்மை மற்றும் தீவிரத்தன்மையின் அடிப்படையில் பதவியிலிருந்தோ கட்சியிலிருந்தோ நீக்கும் முடிவையோ தலைவருக்குப் பரிந்துரைக்கும். பிறகு, தொடர்புடைய நபர் மீது, தலைவர் நடவடிக்கை எடுப்பார்.
இந்த ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி நியாயமான வகையில் வெளிப்படைத் தன்மையுடனும் விரைந்து செயல்படவும், இனி வரும் ஒழுங்கு நடவடிக்கை புகார்களை மேற்கண்ட விதத்தில் விசாரித்து, நடவடிக்கை எடுப்பதற்கும் மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர்கள் ஒத்துழைக்க வேண்டும் என மநீம கேட்டுக் கொண்டுள்ளது.