சென்னை: மிக்ஜாம் புயல் எதிரொலியாகச் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து சாலைகளிலும் குடியிருப்பு பகுதிகளிலும் மற்றும் தாழ்வான இடங்களிலும் மழை நீர் பெருக்கெடுத்து சென்னை மற்றும் புறநகர்ப் பகுதி முழுவதும் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றது.
இந்த நிலையில் தாம்பரம் மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் GST சாலை, வேளச்சேரி பிரதான சாலை, OMR சாலை, ECR சாலை மற்றும் முக்கிய சாலைகளில் பலத்த காற்று மற்றும் மழையின் காரணமாக ஆங்காங்கே மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாலைகளில் முறிந்து விழுந்துள்ளது.
அதனைச் சீர் செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் பொது மக்கள் யாரும் அத்தியாவசிய தேவையின்றி வீட்டிலிருந்து வெளியே வர வேண்டாம் என்று தாம்பரம் மாநகர காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் சாலைகளில் குளம் மற்றும் ஏரிகள் நிரம்பியும் உடைந்தும் வெள்ளம் பெருக்கெடுத்து சாலையில் செல்வதால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி போக்குவரத்து முன்றிலுமாகவும் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனை மேம்பாலத்தில் மின் கம்பம் விழுந்துள்ளதால் மேம்பாலம் மூடப்பட்டுள்ளது. சோழிங்கநல்லூர் சந்திப்பு முதல் மேடவாக்கம் குளோபல் மருத்துவமனை வரை உள்ள சாலை, காமாட்சி மருத்துவமனை சந்திப்பு முதல் ஈச்சங்காடு சந்திப்பு மற்றும் 200 அடிச் சாலை மூடப்பட்டுள்ளன.
மேலும் 400 அடி வெளிவட்ட சாலை, வண்டலூர் முதல் பூந்தமல்லி வரை உள்ள சர்வீஸ் சாலையில் வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. சித்தாலபாக்கம் முதல் மாம்பாக்கம் செல்லும் வழி தடை செய்யப்பட்டுள்ளது. இதுமட்டும் இல்லாது OMR சாலையில் கனரக வாகனங்கள் கேளம்பாக்கம் சந்திப்பில் இருந்து வண்டலூர் மார்க்கமாகத் திருப்பிவிடப்படுகின்றன.
தாம்பரத்தில் இருந்து முடிச்சுர் செல்லும் சாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தருமபுரி - மொரப்பூர் ரயில்வே திட்டத்தில் மாற்றம் - நாடாளுமன்றத்தில் எம்.பி செந்தில்குமார் கோரிக்கை!