மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், கிராமப்புற மக்களுக்கு 100 நாள் வேலை வழங்கப்படுகிறது. அத்திட்டம் முறையாக நடத்தப்படுகிறதா? என்பதைக் கண்காணிக்க தமிழ்நாடு அரசு சமூக தணிக்கை அமைப்பு 2013ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.
அத்தணிக்கை குழுவுக்கு இயக்குநரை நியமிக்கக்கோரிய வழக்கில், இயக்குநர் பதவிக்கு விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளதாக, தெரிவிக்கபட்டதை அடுத்து, வழக்கு முடித்து வைக்கபட்டது.
ஆனால், சமூக தணிக்கைக் குழுவை அரசின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வகையில், அந்தத் தணிக்கைக் குழுவின் இயக்குநர் பதவிக்குத் தகுதியை நிர்ணயித்து வெளியிடப்பட்ட அரசின் அறிவிப்பாணையை ரத்து செய்யக்கோரி, சட்டநாதன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், கிராமப் பகுதிகளில் மக்களுடன் நேரடியாகப் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்களையும், சமூக தணிக்கைத் துறையில் அனுபவம் வாய்ந்தவர்களையும்; சமூக தணிக்கைக் குழு அமைப்பின் இயக்குநராக நியமிப்பதே சரியாக இருக்கும் எனக்கூறி, அரசின் அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட்டார்.
மேலும் இப்பதவிக்கு, பிற மாநிலங்களைப் போல விதிகளைப் பின்பற்றி, நான்கு வாரங்களில் மீண்டும் தகுதியை நிர்ணயிக்க வேண்டுமெனவும், அதன் அடிப்படையில் எட்டு வாரங்களில் சமூக தணிக்கைக் குழு அமைப்பின் இயக்குநர் பதவிக்கு விண்ணப்பங்களை வரவேற்று, புதிய அறிவிப்பாணையை வெளியிட வேண்டுமெனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: சொத்து வரி பிரச்னை - அரசியல் கட்சிகள் மீது உயர் நீதிமன்றம் அதிருப்தி