பவித்ரா ஜோதி மக்கள் அறக்கட்டளை சார்பில் மகாளய அமாவாசையை முன்னிட்டு சென்னை திருவொற்றியூர் திருநாமம் கடற்கரையில் ஆண்டுதோறும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கப்படுவது வழக்கம்.
பொதுவாக ஆறு, குளம், கடற்கரையில் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். ஆனால், சென்னையில் கடற்கரை பகுதியில் தர்ப்பணம் கொடுக்க வசதியில்லாததால், கோயில்களில் தர்ப்பணம் கொடுக்கப்படுகிறது.
இறந்தவர்களுக்கு திதி கொடுப்பதற்காக காசி, ராமேஸ்வரம் ஆகிய புனித தலத்துக்கு ஒரு சிலரால் மட்டுமே செல்ல முடியும் என்பதால், ஏழை எளியவர், பணம் படைத்தவர் என அனைவரும் ஒரே இடத்தில் இலவசமாக திதி கொடுக்க ஏதுவாக, திருவொற்றியூர் கடற்கரையில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் ஏராளமானோர் குவிந்தனர்.
திருச்சி : மகாளய அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து காவிரி ஆற்றில் புனித நீராடினர். அமாவாசை தினத்தன்று குடும்பத்தில் இறந்த முன்னோர்களுக்கும், உறவினர்களுக்கும் திதி கொடுத்து வழிபாடு நடத்துவது இந்துக்களின் பாரம்பரியமாகும். இதிலும் ஆடி அமாவாசை மற்றும் மஹாளய அமாவாசை என்பது சிறப்பு வாய்ந்ததாகவும். இதர அமாவாசை தினங்களில் திதி கொடுக்க முடியாதவர்கள் ஆடி அமாவாசை மற்றும் மகாளய அமாவாசைகளில் திதி கொடுக்கலாம் என்பது ஐதீகம்.
ஈரோடு : மஹாளய அமாவாசையை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வந்திருந்து தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து கூடுதுறையில் புனித நீராடி பவானி சங்கமேஸ்வரரை வணங்கி வழிபட்டனர். மேலும், தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களும் இறந்த முன்னோர்களுக்கு திதி கொடுத்து தர்ப்பணம் செய்து புனித நீராடினர்.
சேலம்: பிரசித்திப் பெற்ற அருள்மிகு சுகவனேஸ்வரர் திருக்கோயில் நந்தவனத்தில் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு வந்து தங்களது குடும்ப முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து இறைவனை வழிபட்டனர்.
திருப்பூர்: மடத்துக்குளம் அருகே கொழுமம் அமராவதி ஆற்றங்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பனம் கொடுக்க சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 200க்கும் மேற்பட்டோர் தங்களின் குடும்பத்துடன் வந்து கொழுமம் அமராவதி ஆற்றங்கரையில் தர்பனம் செய்து எள் உருண்டைகளை ஆற்றில் கரைத்து வழிபட்டனர்.
வேலூர்: திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள சக்தி மளிகை ஸ்டோரின் உரிமையாளர் லோகநாதன் என்பவர், கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக திருப்பத்தூர் நகர் பகுதிகளில் இதுவரை 20ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் மற்றும் பூ செடிகளை நடவு செய்ய அவரது சொந்த செலவில் வழங்கி வருகிறார். இந்த நிலையில் இன்று இந்தியா முழுவதும் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை மகாளய அமாவசை 21வருடங்களுக்கு பிறகு இன்று கடைப்பிடிக்கப்படுவதால் பொதுமக்கள் அனைவரும், அவர்களின் விருப்பப்படி கோயில் மற்றும் வீட்டில் முன்னோர்களை வழிபாடு செய்து வந்தனர்
ஆனால் சமூக ஆர்வலர் லோகநாதன் என்பவர் இன்று அவரது சக்தி மளிகை கடையில் மூன்றாயிரம் விதை பந்துகளை கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கினார்.
அரியலூர்: பொய்யாத நல்லூர் கிராமத்தில் ஸ்ரீ மஹா பிரத்தியங்கரா ஜேபி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் அமாவாசை தோறும் மிளகாய் சண்டியாகம் நடப்பது வழக்கம். அதன்படி, இன்று நடைபெற்ற சண்டியாகத்தில் மூட்டை மூட்டையாக மிளகாய் கொட்டப்பட்டது. அவ்வாறு கொட்டப்படும் மிளகாய் எவ்வித நெடியும் ஏற்படுத்தவில்லை என்பது இக்கோயிலின் சிறப்பாகும். மேலும் யாகத்தில் கனிகள், நவதானியங்கள் ஆகியவை கொட்டப்பட்டன. பின்னர், கலசங்களில் இருந்து நீரை ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது.