சென்னை: சிந்து முதல் வைகை வரை செழித்தோங்கிய தமிழர் நாகரிகத்திற்கான உலகத் தரத்திலான அருங்காட்சியகத்தினை 400 கோடி ரூபாய் செலவில், தற்போது மதுரை மத்திய சிறைச்சாலை இருக்கும் இடத்தில் அமைத்திட வேண்டும் என்றும், அதற்கு உலக அளவிலான வல்லுநர் குழு அமைக்கப்பட வேண்டும் என்றும், மதுரை எய்ம்ஸ், மதுரை நைபர், மதுரை பன்னாட்டு விமான நிலைய கோரிக்கைகளில் தொடர்ந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதை உறுதிசெய்ய வேண்டும் எனவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் சு. வெங்கடேசன் சந்தித்து மனு அளித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று, மு.க. ஸ்டாலினை சு. வெங்கடேசன் சந்தித்து மதுரையின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்த 32 கோரிக்கைகள் அடங்கிய மனுவினை வழங்கினார். இந்தச் சந்திப்பின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் மா. கணேசன், புறநகர் மாவட்டச் செயலாளர் கே. ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.
32 கோரிக்கைகள்
பின்னர் செய்தியாளரிடம் பேசிய வெங்கடேசன்,
”* மதுரை மாவட்டத்தில் நான்கு புதிய தொழிற்பேட்டைகளை உருவாக்க வேண்டும். மேலூர் பகுதி, தொழிற்பேட்டைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
* மதுரைக்கான மாஸ்டர் பிளானில் புதிய தொழிற்சாலைகளுக்கு 10 விழுக்காடு இடங்களை வகைப்படுத்த வேண்டும்.
* மதுரை - தூத்துக்குடி தொழில் பெருவழித் திட்டத்தைச் சிறப்புடன் செயல்படுத்த தனி ஐஏஎஸ் அலுவலரை நியமிக்க வேண்டும்.
* மதுரையில் புதிய நவீன தகவல் தொடர்பு தொழில்நுட்பப் பூங்காவினை உருவாக்க வேண்டும்.
* மதுரையில் ஜவுளித் தொழிலை மேம்படுத்த ஜவுளிக்கென தனியாக வாரச் சந்தையினை உருவாக்க வேண்டும்.
* சுங்கடிச் சேலைகளுக்கான சிறப்புச் சந்தையினை ஏற்படுத்த வேண்டும்.
* உயிரியல் துறையில் சிறு-குறு தொழில்களை ஊக்குவிக்க காமராசர் பல்கலைக்கழகத்தில் டைசல் பூங்காவினை உருவாக்க வேண்டும்.
* மதுரையின் மையத்தில் இருக்கும் மத்திய சிறைச் சாலையினை உடனடியாக புறநகர் பகுதிக்கு மாற்றிட வேண்டும்.
* சிந்து முதல் வைகை வரை செழித்தோங்கிய தமிழர் நாகரிகத்திற்கான உலகத் தரத்திலான அருங்காட்சியகத்தினை 400 கோடி ரூபாய் செலவில், தற்போது மதுரை மத்திய சிறைச்சாலை இருக்கும் இடத்தில் அமைத்திட வேண்டும். அதற்கு உலக அளவிலான வல்லுநர் குழு அமைக்கப்பட வேண்டும்.
* பாத்திமா கல்லூரி முதல் கன்னியாகுமரி நெடுஞ்சாலை சந்திப்பு வரை வைகையின் வடக்கு நதிக்கரை சாலையை விரிவுப்படுத்த வேண்டும்.
* காளவாசலிலிருந்து கன்னியாகுமரி செல்லும் மேலக்கால் சாலையை விரிவுபடுத்த வேண்டும்.
* விரகனூர் சந்திப்பு, மண்டேலாநகர் சந்திப்பு, மேலமடை, அரசு இராசாசி மருத்துவமனை, மாட்டுத்தாவணி, தெற்குவாசல், கோரிப்பாளையம் ஆகிய இடங்களில் புதிய மேம்பாலங்களை அமைக்க வேண்டும்.
* பழுதான நிலையில் உள்ள மேயர் முத்து பாலத்தைச் சீரமைக்க வேண்டும். பழங்காநத்தம் வ.உ.சி. பாலத்தினை விரிவுபடுத்தி புதுப்பிக்க வேண்டும்.
* மதுரை மாவட்ட விரைவுப் போக்குவரத்து ஏற்பாட்டிற்கு மதுரை மெட்ரோவிற்கான சாத்தியக்கூறு விரைந்து செய்யப்பட வேண்டும்.
* வைகை நதியினைப் பாதுகாக்க ஐந்து மாவட்ட நிர்வாக தலையீடுகளை மாற்றி ஒற்றை நிர்வாக அலகின்கீழ் கொண்டுவருகிற புதிய வைகை நிர்வாக அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.
* மதுரை மாநகராட்சியின் விரிவாக்கப்பட்ட வார்டுகளில் பாதாள சாக்கடைத் திட்டத்தினை மேற்கொள்ள வேண்டும்.
* வைகை உள்ளிட்ட நீர்நிலைகளில் கலக்கும் கழிவுநீர் உடனடியாகத் தடுக்கப்பட வேண்டும்.
* மதுரை மாநகரின் சாலைகளைச் சீரமைக்க உடனடியாக 150 கோடி ரூபாய் ஒதுக்கப்பட வேண்டும்.
* அலங்காநல்லூர் பகுதியில் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான அதிநவீன கலை அரங்கம் உருவாக்கப்பட வேண்டும்.
* உலகத் தமிழ் சங்கத்தினைச் சீரமைத்து அனைத்து தமிழறிஞர்களும், தமிழ் அமைப்புகளும் பயன்படுத்தும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
* மதுரையில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரியினை உருவாக்க வேண்டும்.
* கொட்டாம்பட்டியில் புதிய அரசு ஐடிஐ உருவாக்க வேண்டும்.
* மதுரை தல்லாகுளம் அவுட்போஸ்ட் காமராசர் பல்கலைக்கழக கல்லூரியினை அரசுக் கல்லூரியாக மாற்றிட வேண்டும்.
* மதுரை விமான நிலைய விரிவாக்கச் சுரங்கப்பாதை, மதுரை நகரத்தின் புதிய உள்வட்டச்சாலை, வெளிவட்டச்சாலை உள்ளிட்ட ஏற்கெனவே அறிவிக்கப்பட்டத் திட்டங்களுக்கு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
* அலங்காநல்லூர் தேசிய சர்க்கரை ஆலையை இயக்கிடவும், அதற்கான பணிகளுக்காக 10 கோடி ரூபாய் ஒதுக்கிடவும் வேண்டும்.
* விவசாயிகளின் நலனுக்காக சாத்தையாறு அணையில் பெரியார் பிரதான கால்வாய் மூலம் நீரை தேக்குவதற்கான சாத்தியக்கூறு ஆய்வினை துவக்க வேண்டும்.
* மேலூர் அரசு மாவட்ட மருத்துவமனையில் விபத்து மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவின் புதிய கட்டடம் கட்ட 50 கோடி ரூபாய் ஒதுக்கிட வேண்டும்.
* மதுரையின் பசுமைப் போர்வையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து, ஏற்கனவே உள்ள காடுகளைப் பாதுகாக்க சிறப்புத் திட்டங்களை அறிவிக்க வேண்டும்.
* மாவட்டத்தில் உள்ள எல்லா நீர்நிலைகளையும் அதன் முழுக்கொள்ளளவிற்குத் தூர்வாரிட வேண்டும்.
* வைகையின் பிறப்பிடமான மேற்குத் தொடர்ச்சி மலைகளைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
* மதுரையின் சுற்றுச்சூழலை மீட்டுருவாக்கம் செய்து காற்று மாசுபடுதலைக் குறைத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
* மதுரை எய்ம்ஸ், மதுரை நைபர், மதுரை பன்னாட்டு விமான நிலைய கோரிக்கைகளில் தொடர்ந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
இந்தக் கோரிக்கைகளை முதலமைச்சர் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம், இந்தியாவின் குடியரசு தினத்தில் தமிழ்நாட்டின் தனி முத்திரையோடு இருக்குறது என்பதை நேற்றைய முதலமைச்சரின் அறிவிப்பு காட்டுகிறது. தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவிப்பு தமிழ் சமூகத்தின் கம்பீரத்தை வெளிப்படுத்துகின்ற அறிவிப்பு.
தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் மத்திய அரசின் பாகுபாட்டின் ஒரு பகுதியாகவே குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு வாகனங்கள் புறக்கணிப்பு அமைந்துள்ளன” எனத் தெரிவித்தார்.