சென்னை: ஆறு கோடி மதிப்பில் கலைஞர் கருணாநிதி பல்லூடக ஆராய்ச்சி மையம் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசிடம் கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இன்று (ஜூலை 28) சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கௌரி செய்தியாளர்களிடம் கூறியதாவது, "தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு தனது காலத்தில் ஏதாவது செய்ய வேண்டுமென மிகப் பெரும் ஆவல் இருந்தது.
தமிழ்மொழியில் படிக்க வேண்டும் என விரும்பினேன். ஆனால் பொறியியல் பட்டம் பெறும் நிலைமை ஏற்பட்டது.
சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பொறுப்பேற்ற பின்னர் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் கற்பிக்கும் பணியினை சென்னை ஐஐடியில் உதவியுடன் செய்தோம்.
சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள பிரச்னைகளை முதலமைச்சர், உயர்கல்வித்துறை அமைச்சர், உயர்கல்வித்துறை செயலாளர் ஆகியோர் கேட்டனர். அவர்களிடம் பல்வேறு புதிய திட்டங்களை சமர்ப்பித்து இருக்கிறோம்.
சென்னை பல்கலைக்கழகத்தில் கலைஞர் கருணாநிதி பல்லூடக ஆராய்ச்சி மையம் ரூ.6 கோடி மதிப்பில் அமைப்பதற்கு அரசிடம் கருத்துரு அனுப்பியுள்ளோம்.
விரைவில் இதற்கான அனுமதி கிடைத்துவிடும். ஆன்லைன் கல்வி முறைகளை மாணவர்களுக்கு கற்பிப்பது, சான்றிதழ் மற்றும் பட்டய படிப்புகளை வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளோம்.
ஆங்கில வடிவில் உள்ள பல்வேறு முக்கிய காணொலிகளை தமிழ் மொழியில் மொழிபெயர்த்து மாணவர்களுக்கு வழங்குவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம்" என்றார்.
இதையும் படிங்க: மாணவர்களின் தற்கொலைக்கு பொறுப்பேற்க முடியாது- அண்ணா பல்கலைக்கழகம்!