சென்னை: சென்னை பல்கலைக் கழகம் மிகவும் தொன்மை வாய்ந்தது. இதில் பல்வேறு முதுகலைப் பாடப்பிரிவுகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. சென்னை பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவர்கள் தங்களது உரிமைக்காகவும், சமூகம் சார்ந்த பிரச்சனைகளுக்காகவும் அடிக்கடி போராட்டங்களில் ஈடுபடுவார்கள்.
இந்த நிலையில், சென்னை பல்கலைக் கழகத்தில் எம்.ஏ. சமூகவியல் பாடப்பிரிவில் படிக்கும் மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபடக் கூடாது என அத்துறை தலைவர் அறிவுறுத்தியதாக தெரிகிறது. போராட்டங்களில் ஈடுபட மாட்டேன் எனவும், அரசியல் தொடர்பில் இருக்க மாட்டேன், துறைத் தலைவருக்கு தெரிவிக்காமல் விடுப்பு எடுத்தால் அதற்கான நடவடிக்கைக்கு கட்டுப்படுகிறேன் எனவும் உறுதி மொழி கூறி, அதில் மாணவர்களும், அவர்களது பெற்றோரும் கையொப்பம் இட வேண்டும் என சமூகவியல் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கு மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் எனப் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, சென்னைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், "சென்னை பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையில் 2ஆம் ஆண்டு எம்.ஏ. படிக்கும் மாணவர்கள் உறுதி மொழிப் படிவத்தில் கையெழுத்துப் போட வேண்டும் என்ற அறிவிப்பு கவலை அளிப்பதாக உள்ளது. இந்த சுற்றறிக்கை உயர் கல்வியின் நோக்கத்தையே சிதைப்பதாக இருப்பதால், அதனைப் பல்கலைக் கழகத்தின் உள்விவகாரமாக பார்க்க முடியாது.
ஜனநாயகத்தின் அம்சங்களாக உள்ள விவாதம், விமர்சனம் இருக்க வேண்டும். அறிவுள்ள குடிமக்கள் இருந்தால் மட்டுமே ஜனநாயகம் பயனுள்ளதாக இருக்கும். இந்தியா என்பது இந்திய அரசியலமைப்பில் 'இறையாண்மை கொண்ட சோசலிச மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசு' என்று வரையறுக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்பின் 19வது பிரிவின்படி, அனைத்து குடிமக்களுக்கும் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம், அமைதியான முறையில் ஆயுதங்கள் இல்லாமல் கூடுவது, சங்கங்கள் அல்லது தொழிற்சங்கங்களை உருவாக்குதல் ஆகியவற்றிற்கு உரிமை உண்டு. அரசமைப்புச் சட்டத்தின் 21வது பிரிவு கண்ணியமான வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கிறது.

பல்கலைக்கழகத்தின் முதுகலை பட்டதாரி மாணவர் அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் திட்டங்களை விமர்சிக்க சட்டப்பூர்வமாக உரிமை பெற்றவர். மேலும், உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளும் விமர்சனத்திற்குரியவை ஆகும். பல்கலைக்கழகம் மாணவர்களின் உரிமைகளை நிலைநிறுத்துவதுடன், அவர்கள் கற்றலுக்கான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும்.
பல்கலைக்கழகமோ அல்லது குறிப்பிட்ட துறையோ மாணவர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யத் தவறினால், மாணவர்களுக்குப் பிரதிநிதித்துவம் செய்வதற்கான முழு உரிமையும் உள்ளது, அவர்களின் பிரதிநிதித்துவங்கள் கவனிக்கப்படாவிட்டால், அவர்களின் உண்மையான கோரிக்கைகள் குறித்து பல்கலைக்கழக நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்கும் போராட்டத்தை மேற்கொள்கின்றனர்.
மாணவர்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து தரத் தவறிய அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும், மாறாக, கண்ணியமான வாழ்க்கையைக் குழிதோண்டிப் புதைக்கும் பிரகடனத்தில் கையெழுத்திட்டு மாணவர்களை அவமானப்படுத்தக் கூடாது.
2ஆம் ஆண்டு எம்.ஏ., சமூகவியல் துறை மாணவர்கள் கையெழுத்திட வேண்டிய உறுதிமொழிப் படிவம் சர்.சி.வி ராமனை நேரடியாக அவமதிக்கும் வகையில் உள்ளது. சர்.சி.வி.ராமன் அன்றைய அரசின் கொள்கைகளை விமர்சித்திருந்தார். சமூகவியல் துறைத் தலைவரை மாணவர்கள் தங்கள் கல்விச் சுதந்திரம் மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் உத்தரவாதம் அளித்துள்ள உரிமைகளைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் எந்த அறிவிப்பையும் பெற வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். மாணவர்களிடமிருந்து அத்தகைய உறுதிமொழிகள் பெறப்படாமல் இருப்பதை உறுதிசெய்யுமாறு சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மற்றும் பதிவாளர் ஆகியோருக்கு வேண்டுகோள் வைக்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: "நாட்டு மக்கள் ஒன்றுபட்டு பாஜக பிடியில் இருந்து நாட்டை மீட்க வேண்டும்" - டி.ராஜா