சென்னை: சென்னைப் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட்டில் காலியாக உள்ள 4 உறுப்பினர் பதவிகளை நிரப்புவதற்கான தேர்தல் வரும் 24ஆம் தேதி நடைபெற உள்ளது. தனியார் கலை அறிவியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகளுக்கான 4 இடங்களுக்கு 8 பேர் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.
அதில் தனியார் கல்லூரி முதல்வர், பேராசிரியர் என்று இருவரின் வேட்புமனுக்களை பல்கலைக்கழக துணைவேந்தர் கௌரி, உரிய தகுதிகள் இல்லை என்று காரணம் கூறி நிராகரித்திருந்தார்.
இதனையடுத்து துணைவேந்தரின் இந்த நடவடிக்கையைக் கண்டித்தும், வாபஸ் பெற வலியுறுத்தியும் தனியார் கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள் என்று பலர் கடந்த 14ஆம் தேதி பல்கலைக்கழக வளாகத்திலும், பதிவாளரின் அறையிலும், பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், உரிய அனுமதியின்றி பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டது ஏன்? என்று வரும் 21ஆம் தேதிக்குள் விளக்கமளிக்கக்கோரி தனியார் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள் என்று 7 பேருக்கு சென்னைப் பல்கலைக்கழக பதிவாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இதையும் படிங்க:இதுவரை கால்நடை மருத்துவக்கல்லூரியில் சேர 9,335 பேர் விண்ணப்பம்