இந்திய குடியுரிமை திருத்த சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தேசிய மக்கள்தொகை பதிவேட்டை எதிர்த்தும் சென்னை பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இன்று காலை முதல் மாணவர்கள் போராட்டம் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இதனால் சென்னை பல்கலைக்கழக வளாகத்தைச் சுற்றிலும் காவல் துறையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் போராட்டத்தினை மாணவர்கள் 48 மணி நேரம் தொடர்ந்து நடத்துவதென திட்டமிட்டுள்ளனர்.
மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக மாநில பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் நடைபெறும் போராட்டம் துணைவேந்தருக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்துசெல்லுமாறு பல்கலைக்கழக நிர்வாகம் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் மாணவர்கள் குடியுரிமை திருத்த சட்டத்தைத் திரும்பப் பெறும்வரை தங்களின் போராட்டம் தொடரும் எனத் தெரிவித்துள்ளனர்.
இதனால் சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள முதுகலை பட்டப்படிப்பு வகுப்புகள், ஆராய்ச்சி வகுப்புகள் உள்ளிட்ட அனைத்து வகுப்புகளும் வரும் 23ஆம் தேதிவரை நடைபெறாது என பல்கலைக்கழகம் தரப்பில் மாணவர்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பப்பட்டுள்ளது. 24ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை சென்னை பல்கலைக்கழகத்தின் விடுமுறை நாளாகும். வகுப்புகள் நடைபெறாது என்பதை மாணவர்களுக்கு பல்கலைக்கழகம் இ-மெயிலில் அனுப்பியுள்ளது.
இதற்கு மாணவர்களுக்கு விடுமுறை அளித்து போராட்டத்தை ஒடுக்கலாம் என பல்கலைக்கழகத்தின் திட்டம் ஒருபோதும் நிறைவேறாது என மாணவர்கள் தெரிவிக்கின்றனர். தாங்கள் திட்டமிட்டபடி 48 மணி நேரமாவது மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தை நடத்துவோம் எனக் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: ஜாமியா வன்முறை: குற்றப் பின்னணியுடைய 10 நபர்கள் கைது!