சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் டெங்கு தடுப்பு தினம் கொண்டாடப்பட்டது. அதில் அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சலை உற்பத்தி செய்யும் ஏடிஸ் கொசுக்கள் உருவாவதை ஆரம்ப நிலையில் கண்டறிந்து அழிப்பதற்கான உபகரணங்களை கல்லூரி முதல்வர் ஜெயந்தி வழங்கினார்.
மேலும் மாணவர்கள் தங்கள் பகுதியில் டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாகாத வகையில் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என உறுதிமொழி எடுத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜெயந்தி, "டெங்கு தடுப்பு தினத்தின் ஒரு பகுதியாக மருத்துவ மாணவர்கள், நர்சிங் மாணவர்கள், மருந்தியல் மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் உட்பட அனைவரும் இணைந்து சென்னை மருத்துவ கல்லூரி மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி வளாகத்தை சுத்தமாக பராமரிப்பதற்கான விழிப்புணர்வு துவக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தப் பகுதியில் டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. வியாழக்கிழமை தோறும் மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி வளாகத்தை சுத்தமாக வைக்கும் விதமாக பராமரிக்கும் பணியினை மேற்கொள்ளவிருக்கிறோம்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் 183 பேர் உள்ளனர். அவர்களில் 23 பேருக்கு டெங்கு காய்ச்சல் உள்ளது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை யாரும் டெங்கு காய்ச்சலால் உயிரிழக்கவில்லை. கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் குறைவாகவே உள்ளது. பருவ காலத்தில் வரக்கூடிய காய்ச்சல்தான் இருக்கிறது" எனக் கூறினார்.
இதையும் படிங்க: 'சசிகலா அதிமுகவில் இணைவது சாத்தியமில்லை' - அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்