சென்னை : நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் வருவாயத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து மீண்டும் வழக்கை விசாரணைக்கு எடுத்து உள்ளது.
ஶ்ரீவில்லிபுத்தூர் முதன்மை அமர்வு நீதிமன்றம் சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மற்றும் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோரை விடுதலை செய்த உத்தரவை தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துள்ளது.
கடந்த 2001 முதல் 2010 வரை வருமானத்துக்கு அதிகமாக 44 லட்சத்து 59 ஆயிரம் ரூபாய் மதிப்பில் சொத்து சேர்த்ததாக அமைச்சர் ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி மற்றும் நண்பர் சண்முக மூர்த்தி ஆகியோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை 2011ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த மதுரை நீதிமன்றம், விருதுநகரில் உள்ள நடுவர் நீதிமன்றத்தின் விசாரணைக்காக மாற்றப்பட்டது. பின்னர் எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்துக்கு 2019ஆம் ஆண்டு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த காவல்துறை வழங்கிய அறிக்கையில், முந்தைய விசாரணையில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக தவறாக கூறப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் மற்றும் குடும்பத்தினர் எந்த முறைகேடுகளும் செய்யவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்ற நீதிமன்றம் அமைச்சர் ராமச்சந்திரன் உட்பட 3 பேரை விடுதலை செய்து கடந்த ஜூலை மாதம் 2023-ல் உத்தரவிட்டது. இதேபோல, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மணிமேகலை ஆகியோருக்கு எதிராக 2006 முதல் 2010 வரையான காலகட்டத்தில் 74 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது.
கடந்த 2019ஆம் ஆண்டு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட இந்த வழக்கில், வருமான வரித்தாக்கல் ஆவணங்களின் அடிப்படையில் 2022 டிசம்பரில் இருவரையும் விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரணை செய்யும் உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இரு அமைச்சர்கள் மீதான சொத்து குவிப்பு வழக்கு ரத்து செய்யப்பட்டதை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளார்.
இந்த வழக்கு இன்று (ஆகஸ்ட் 23) விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு எதிரான கடந்த 1996ஆம் ஆண்டு முதல் 2001ஆம் காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த வழக்கை வேலூர் மாவட்ட நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்த நிலையில், அதை சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்காக விசாரணைக்கு எடுத்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : NLC : தொழிலாளர்கள் கோரிக்கை மீது 8 வாரத்தில் முடிவு.. தொழிலாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்!