சென்னை: செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டம், பரங்கிமலையில் உள்ள 41 ஆயிரத்து 952 சதுர அடி நிலம், தற்காலிகமாக பயன்படுத்திக் கொள்ள காசி விஸ்வநாதர் தேவஸ்தானத்திற்கு தமிழக அரசு அனுமதி அளித்து இருந்தது. இந்த இடத்தில் வன்னியர் சங்கக் கட்டடம் கட்டப்பட்டு, செயல்பட்டு வந்தது. இந்த நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாக கூறி, பல்லாவரம் வட்டாட்சியர் நோட்டீஸ் அனுப்பினார். இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 18) காலை அங்கிருந்த வன்னியர் சங்க கட்டடத்துக்கு அரசு சீல் வைத்தது.
அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக வன்னியர் சங்கத்தின் சார்பில் அதன் செயலாளர் திருக்கச்சூர் கே.ஆறுமுகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், "சுமந்தா காமினி என்பவரிடம் இருந்து இந்த நிலத்தை வாங்கியதாகவும், தற்போது அந்த கட்டடத்தில் உயர் கல்வி படிக்கும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களின் விடுதி செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நிலத்தில் இருந்து காலி செய்யும்படி அரசு அனுப்பிய நோட்டீசுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சங்கம் செயல்படுவதில் தலையிடக் கூடாது என அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரப்பட்டு இருந்தது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
அப்போது, வன்னியர் சங்கம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா, "கடந்த 33 ஆண்டுகளாக இந்த நிலம் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மேல் முறையீடு செய்துள்ளதாகவும், சங்க கட்டடத்தில், நேர்முகத் தேர்வு, போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் 200 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு தங்க வைக்கப்படுகின்றனர் என்றும் வாதிட்டார்.
மேலும், தற்போது 58 மாணவர்கள் தங்கியிருந்ததாகவும், அவர்கள் வெளியேற்றப்பட்டு விட்டதாகவும், அவர்கள் அடுத்த வாரம் வரை அங்கேயே இருக்க அனுமதிக்க வேண்டும்" என்றும் கேட்டுக் கொண்டார். தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், "நிலத்தை விற்றவர் குத்தகைதாரர் என்றும், ஆறு மாணவர்கள் மட்டும் தற்போது இருந்ததாகவும், அதில் ஐந்து பேர் தாம்பரத்தில் உள்ள விடுதியில் தங்க ஒப்புக் கொண்டுள்ளதாகவும், ஒரு மாணவர் மறுப்பதாகவும் தெரிவித்தார்.
இருப்பினும், கூடுதல் மாணவர்கள் இருந்தால், அடையாள அட்டையுடன் வந்தால், அவர்கள் தங்குவதற்கான ஏற்பாடு செய்யப்படும்" எனத் தெரிவித்தார். வழக்கு தொடர்பாக இரு தரப்பும் ஆவணங்களை தாக்கல் செய்ய அவகாசம் கோரியதை அடுத்து வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 22ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், அதுவரை தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் எனவும், கட்டடத்தை இடிக்க கூடாது என்றும் உத்தரவிட்டனர்.