சென்னை : தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில், ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக தடை சட்டம் கொண்டு வரப்பட்டது. இதை எதிர்த்து இணையதள விளையாட்டுகளை நடத்தும் நிறுவனங்கள், நீதிமன்றம் சென்று சட்டத்தை ரத்து செய்தது. இருப்பினும் புதிய சட்டத்தை மாநில அரசு கொண்டு வரலாம் என நீதிமன்றம் தெரிவித்தது.
இதையடுத்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக அரசு பொறுப்பேற்றதும், கடந்த ஆண்டு இறுதியில் ஆன்லைன் விளையாட்டுகளின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய முன்னாள் நீதிபதி கே.சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. சந்துரு குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் தமிழ்நாடு இணையவழி சூதாட்டத்தை தடை செய்தல், ஒழுங்குபடுத்துதல் அவசர சட்டம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கொண்டு வரப்பட்டது.
தொடர்ந்து அவசரச் சட்ட மசோதாவுக்கு பதிலாக, நிரந்தர சட்டம் இயற்ற அதில் உள்ள ஷரத்துகளில் எந்த மாற்றமும் செய்யாமல், சட்டப் பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஏறத்தாழ 131 நாட்கள் கழித்து ஆளுநர் ஆர்.என்.ரவி அந்த மசோதாவை கடந்த மார்ச் 6 ஆம் தேதி தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பினார்.
இதற்கு அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து கடந்த மார்ச் 23 ஆம் தேதி சட்டப் பேரவையில் மீண்டும் ஆன்லைன் தடை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 10 ஆம் தேதி ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்தார்.
ஆளுநரின் ஒப்புதலை தொடர்ந்து ஆன்லைன் சூதாட்டம் தடைச் சட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சுதாட்டங்களில் விளையாடினால் 3 மாதங்கள் சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டது. மேலும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது 3 மாத சிறை தண்டனை, அல்லது அபராதமுடன் கூடிய தண்டனை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் சட்டத்தில் கொண்டு வரப்பட்டன.
இந்நிலையில், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை எதிர்த்து அதை நடத்தும் நிறுவனங்கள் நீதிமன்றத்தை நாடி உள்ளன. ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு தடை விதிக்கக் கோரியும், சட்டத்தை ரத்து செய்யக் கோரியும், ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.
இந்த மனு நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் கலைமதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி காணொலி வாயிலாக ஆஜராகி இந்த மனுவில் வாதாடினார். ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் முறையீட்டை கேட்ட நீதிபதிகள், மனுத் தாக்கல் செய்து, மனு முறையாக இருந்தால் நாளை (ஏப். 27) விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்றும், இல்லாவிட்டால் வழக்கமான பட்டியலில் இடம் பெறும் என்றும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க : HSC Result Date: 12th ரிசல்ட் வெளியாகும் தேதி அறிவிப்பு!