கறுப்பர் கூட்டம் யூ-ட்யூப் சேனலின் சுரேந்திரன், செந்தில்வாசன் ஆகியோர் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்துசெய்துள்ளது.
கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாகச் சித்திரித்த குற்றச்சாட்டில் கறுப்பர் கூட்டம் என்ற யூ-ட்யூப் சேனலைச் சேர்ந்த நாத்திகன் என்கிற சுரேந்திரன், செந்தில்வாசன், சோமசுந்தரம், குகன் ஆகியோரை சென்னை காவல் துறையினர் கைதுசெய்தனர்.
இவர்களில் நாத்திகன், செந்தில்வாசன் ஆகியோரை குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி நாத்திகனின் மனைவி கிருத்திகா, செந்தில்வாசன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் ஆள்கொணர்வு மனுவைத் தாக்கல்செய்திருந்தனர்.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் பி.என். பிரகாஷ், வி. சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு 2 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்துசெய்து தீர்ப்பை வழங்கியுள்ளது.