சென்னை: வேலூரைச் சேர்ந்த சங்கர் என்பவர் அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவி ஆஷாவிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் ஆஷா அடிக்கடி பெற்றோர் வீட்டுக்கு வந்து விடுவது வாடிக்கையாக இருந்துள்ளது. இதனால், கோபமடைந்த ஆஷாவின் சகோதரர் ஐசக், கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நேதாஜி ஸ்டேடியம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்த சங்கர் மீது பெட்ரோல் நிரப்பிய பாக்கெட்டை வீசி தீ வைத்துள்ளார்.
இதில் காயமடைந்த சங்கர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இரு நாட்களுக்குப் பின் மரணமடைந்துள்ளார். இதையடுத்து ஐசக்-க்கு எதிராக வேலூர் காவல் நிலையத்தினர் பதிந்த வழக்கை விசாரித்த வேலூர் நீதிமன்றம், ஐசக்-க்கு ஆயுள் தண்டனை விதித்து 2018-இல் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து ஐசக் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் குமரேஷ்பாபு அமர்வு, இறந்து போன சங்கர், தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவரிடம், யார் பெட்ரோலை வீசி தீ வைத்தனர் எனத் தெரியவில்லை என்றும், காவல் துறை அதிகாரியிடம் ஐசக்கின் பெயரையும் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆனால் மாஜிஸ்திரேட்டிடம் அளித்த மரண வாக்குமூலத்தில், மூன்று பேர் வந்து தன் மீது பெட்ரோல் வீசி தீ வைத்ததாகக் கூறியுள்ளார். சங்கரின் வாக்குமூலம் முன்னுக்குப் பின் முரணாக உள்ளதாக தெரிவித்துள்ளது.
மரண வாக்குமூலத்தில் மூன்று பேர் என சங்கர் குறிப்பிட்ட நிலையில், அவர்களை பற்றி காவல் துறையினர் விசாரிக்கவில்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், சங்கரின் வாக்குமூலம் சந்தேகத்துக்கு இடமாக உள்ளதால், சந்தேகத்தின் பலனை குற்றம் சாட்டப்பட்ட ஐசக்-க்கு வழங்குவதாகக் கூறி, அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்து தீர்ப்பளித்தனர்.