சென்னை: போளூர் வட்டத்தில் உள்ள பால்வார்த்து வென்றான் கிராமத்தில் சத்துணவு சமையலராக நியமிக்கப்பட்ட பெண் ஒருவர், கடந்த 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பணியில் இருந்தபோது உயிரிழந்துள்ளார். அப்போது, கருணை அடிப்படையில் அவரது மகள் கோமதிக்கு, கடந்த 2021ஆம் ஆண்டு சமையலர் பணி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், தனக்கு சத்துணவு அமைப்பாளர் பணி வழங்க வேண்டுமென திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடமும், சமூக நலத்துறை துணை செயலாளர் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்த நிலையில், இரு அதிகாரிகளும் தனது கோரிக்கைகளை பரிசீலிக்கவில்லை எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.தமிழ்ச்செல்வனும், அரசுத் தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் வி.யமுனா தேவியும் ஆஜராகி, தங்களது வாதங்களை முன் வைத்தனர்.
இரு தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி, பெண் சமையலர் அல்லது சமையல் உதவியாளராக இருந்தவர் பணியின்போது உயிரிழந்தால், அவரது வாரிசுக்கு சத்துணவு அமைப்பாளர் பணி வழங்க வேண்டுமென 2019ஆம் ஆண்டில் தமிழக அரசு அரசாணை பிறப்பித்து உள்ளதைச் சுட்டிக் காட்டி, போளூர் தாலுகாவில் காலியாக உள்ள 53 பணியிடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் மனுதாரரை 8 வாரத்தில் சத்துணவு அமைப்பாளராக நியமிக்க வேண்டும் எனக் கூறி, மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
இதையும் படிங்க:வெற்றிலை பாக்குப் போடுவது நல்லதா? கெட்டதா? மருத்துவர்கள் கூறுவது என்ன?