சென்னை: தியாகராய நகரில் உள்ள அப்துல் அஜிஸ் தெருவில் கிரிஜா என்ற மூதாட்டி இவரது வீடுகளை வாடகைக்கு விட்டு வசித்து வருகிறார். இவரது வீட்டில் வசித்து வந்த திமுக வட்டச் செயலாளர் ராமலிங்கம் சில காலங்களாக வாடகை தராமல் இருந்து வந்துள்ளார். இதனால் கிரிஜா மூதாட்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கடந்த 2017ல் வீட்டை காலி செய்யும்படி உத்தரவிட்டனர்.
ஆனால், ராமலிங்கம் வீட்டை காலி செய்யாததால், மாவட்டச்செயலாளருக்கு எதிராகக் கிரிஜா, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், 48 மணி நேரத்துக்குள் காவல்துறையினரை அனுப்பி, கிரிஜாவின் வீட்டிலிருந்து ராமலிங்கத்தை வெளியேற்றி, அதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யச் சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்டார்.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, ராமலிங்கம் வீட்டை காலி செய்து விட்டதாகவும், வீடு தற்போது உரிமையாளர் வசம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாகவும், காவல்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதை ஒப்புக்கொண்ட கிரிஜா தரப்பில், வாடகை பாக்கி இன்னும் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, அரசியல்வாதிகளின் வார்த்தைகள் மற்றும் செயல்கள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடம் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், அரசியல்வாதிகள் பொதுமக்களுக்கு நன்மை அளிக்கக்கூடிய வகையில், நல்வழியில் நடக்க வேண்டுமென நீதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும், அரசியல்வாதிகள் தங்களது அதிகாரத்தின் மூலம் பொதுமக்களை மிரட்டுவதையும், அவர்களுக்கு பிரச்னையை ஏற்படுத்துவதையும் நீதிமன்றம் கைகட்டி வேடிக்கை பார்க்காது எனவும், அரசியல் வாதிகள் தங்கள் அரசியல் அதிகாரத்தை மக்கள் நலனுக்காகப் பயன்படுத்த வேண்டுமே தவிர, சுயநலனுக்காக பிரச்னைகளை ஏற்படுத்தும் விதத்தில் பயன்படுத்தக் கூடாது என தெரிவித்தார்.
நில அபகரிப்பு என்பது அப்பட்டமான பகல் கொள்ளை எனக் குறிப்பிட்ட நீதிபதி, வாடகை பாக்கி வசூலிப்பதைப் பொறுத்தவரை மாவட்ட ஆட்சியர் மூத்த குடிமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையைச் செப்டம்பர் 11ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க:நீல வான தூய காற்று தினம்: காற்று மாசில் முன்னேறும் இந்தியா.. ஓர் ஆண்டுக்கு உயிரிழப்பு எவ்வளவு தெரியுமா?