சென்னை: அரசுப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு நடைமுறைகளை பள்ளிக்கல்வித்துறை 2015ஆம் ஆண்டு மேற்கொண்டது. வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடிப்படையிலும், நேரடியாகவும் தேர்வு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த தேர்வில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாகவும், நேரடியாகவும் பங்கேற்ற திருப்பூரைச் சேர்ந்த இளங்கோ என்பவர், கலப்பு மணம் புரிந்தவர்களுக்கான முன்னுரிமை ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்திருந்தார். தேர்வில் 115 மதிப்பெண்கள் பெற்ற போதும், எஸ்.எஸ்.எல்.சி. சான்றிதழ், கலப்பு மணம் புரிந்து கொண்டவருக்கான சான்றுகளை சமர்ப்பிக்கவில்லை எனக் கூறி, பணிநியமனத்துக்கு அவர் பெயர் பரிசீலிக்கப்படவில்லை.
பின்னர், அந்த சான்றிதழ்களை சமர்ப்பித்த அவர், ஆய்வக உதவியாளர் பணி நியமனம் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் 2017ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், சான்றிதழ்களை தாமதமாக சமர்ப்பித்தார் என்பதற்காக வேலைவாய்ப்பு வழங்க மறுக்க முடியாது எனவும், மனுதாரரை விட குறைவான மதிப்பெண்கள் பெற்றவருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளதால், மனுதாரரை ஆய்வக உதவியாளராக நியமித்து நான்கு வாரங்களில் உத்தரவு பிறப்பிக்க பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சென்னைப் பல்கலைக்கழகத்தில் 5 பேர் பணியிடை நீக்கம்!