சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் சிட்லபாக்கம் ஏரியில் அமைந்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், சட்டவிரோத கட்டடங்களை இடிக்கவும் அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அறப்போர் இயக்கம் சார்பில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழ்நாடு முழுவதும் உள்ள நீர்நிலைகளில் விதிகளுக்குப் புறம்பாகக் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள், ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் மீண்டும் நேற்று (செப். 30) விசாரணைக்கு வந்தபோது, பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சித் துறை,பஞ்சாயத்து ராஜ் துறை ஆகியவற்றின் சார்பில் அறிக்கைத் தாக்கல்செய்யப்பட்டது.
அதில், நீர் ஆதாரங்களைப் பாதுகாக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும், புதிய ஆக்கிரமிப்புகள் ஏற்படாமல் தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகவும், தலைமைச் செயலர் முன்னிலையில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வெள்ளம் வந்தால் பாதிக்கப்படக்கூடிய ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக, அரசுப் புறம்போக்கு, நீர்நிலைகளை ஆக்கிரமித்து மேற்கொள்ளப்படும் கட்டுமானங்களுக்கு இனி தண்ணீர் இணைப்போ, மின் இணைப்போ வழங்கக் கூடாது என அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
நீர்நிலைகளைப் பாதுகாக்கும் வகையிலும், ஆக்கிரமிப்பு குறித்து அரசிடம் தெரியப்படுத்தும் வகையிலும் ஒவ்வொரு கிராம அளவில் இளைஞர்கள், தன்னார்வ அமைப்பைச் சேர்ந்தோரைக் கொண்டு குழு அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடையாறு, கூவம் ஆறு, சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான கால்வாய்களை ஆக்கிரமித்து வசித்துவந்த 18 ஆயிரத்து 363 குடும்பங்கள் அப்புறப்படுத்தப்பட்டு அவர்களுக்கு மாற்று இடங்களில் வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், சென்னை தவிர பிற நகராட்சிகள், மாநகராட்சிகளில் உள்ள 585 நீர்நிலைகளில் 9,802 ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டு அவற்றில், இதுவரை 5,178 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர்நிலைகளைப் பராமரிக்கும் வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை அலுவலர்கள், நீர்நிலைகள் உள்ள பகுதிகளின் சர்வே எண்களை பதிவுத் துறைக்குத் தெரிவிக்கவும், அத்தகைய இடங்களை அரசு இடங்களாகக் கணக்கில்கொண்டு அவற்றின் மதிப்பை "ஜீரோ" என நிர்ணக்க உள்ளதாகவும், அத்தகைய இடங்களை யாருக்கும் பதிவு செய்யக்கூடாது என அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளனர்.
இதையும் படிங்க:SRH vs CSK: ஹைதராபாத் பேட்டிங்; பிராவோ ரிட்டன்!