சென்னை: அயனாவரத்தைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்த மனுவில், "திருவள்ளூர் மாவட்டம் பெருமாள்பட்டு, வேப்பம்பட்டு, கந்தன்கொல்லை, சிவன் வாயில், ஜமீன் கொரட்டூர், தண்டலம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்கள் வேப்பம்பட்டு ரயில் நிலையம் அருகில் லெவல் கிராசிங்கை கடந்தே சென்னை - திருவள்ளூர் நெடுஞ்சாலையை அணுக வேண்டிய நிலை இருந்தது.
இதைக் கருத்தில்கொண்டு ரயில்வே மேம்பாலமும், சுரங்கப் பாதையும் கட்ட 2010ஆம் ஆண்டு 30 கோடி ரூபாயில் பணிகள் தொடங்கப்பட்டு ரயில்வே துறையின் சார்பில் மேம்பாலப் பணிகள் 75 விழுக்காடு முடிவடைந்த நிலையில், நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்த வழக்குகளில் விதிக்கப்பட்ட தடையால், மேம்பாலத்தை அணுகுவதற்கான சாலை அமைக்கும் பணிகள் முழுமை பெறாமல் இருக்கின்றன.
வேப்பம்பட்டு ரயில் நிலையம் அருகில் இருந்த லெவல் கிராசிங்கும் அகற்றப்பட்டதால், அருகில் உள்ள பள்ளி கல்லூரி மாணவர்கள், முதியோர், பெண்கள், மாற்றுத்திறனாளி பள்ளி மாணவர்கள் ரயில் தண்டவாளங்களைக் கடந்துசெல்ல வேண்டியுள்ளது. சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் இடையேயான பரபரப்பான மார்க்கத்தில் சில நேரங்களில் ரயில் மோதி உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.
பெருமாள்பட்டு சாலையில் பாலம் தொடர்பான பணிகள் முடிவடைந்த நிலையில், மற்றொரு பகுதியில் பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் அவற்றை விரைந்து முடித்து, பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரக்கோரி கடந்த ஜூலையில் தமிழ்நாடு அரசிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கை இன்று (டிசம்பர் 30) விசாரித்த பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு, நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக, உரிமையியல் நீதிமன்றத்தில் தடை உத்தரவுகள் ஏதும் இல்லை என்றால், நிலம் கையகப்படுத்தும் பணிகளை முடித்து, சாலைப் பணிகளை முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தனர்.
இதையும் படிங்க: 'புத்தாண்டு 2022; நள்ளிரவு 12 மணிக்கு கோயில்கள் திறக்கப்படும்'