சென்னை: தமிழ்நாடு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சம்பந்தமான இடங்கள், அவரது சகோதரர் வீட்டில் சமீபத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையைத் தொடர்ந்து சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்திருப்பதாக கூறி அமலாக்கத்துறை நேற்று செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்கள், அவரது சகோதரர் அசோக் வீட்டில் சோதனை நடத்தினர்.
மேலும் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியுன் அதிகாரப்பூர்வ அறையிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். தலைமைச் செயலகத்தில் உள்ள அறையில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதற்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் 18 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடந்த நிலையில் இறுதியில் அமலாக்கத்துறையினர் செந்தில் பாலாஜியை விசாரிக்க அழைத்துச் சென்றனர். அப்பொழுது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் உடனடியாக அவரை ஓமந்தூரர் அரசினர் தோட்டத்தில் உள்ள அரசு பன்னோக்கு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜியை முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள் நலம் விசாரித்தனர். அவருக்கு முக்கியமான ரத்த நாளத்தில் மூன்று இடங்களில் அடைப்பு இருப்பதால் பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவமனை தரப்பில் அதிகார பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றினைத் தாக்கல் செந்திருந்தார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலாவின் தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனுவை விசாரிக்க தலைமை நீதிபதி கங்கபூர்வாலா ஒப்புதல் அளித்து இருந்தார்.
இந்நிலையில் செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்திருந்த ஆட்கொணர்வு மனுவை விசாரிக்க அமர்வில் இருந்த நீதிபதி ஆர்.சக்திவேல் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் விசாரணை அமர்வில் இருந்து விலகியதற்கான காரணத்தையும் நீதிபதி சக்திவேல் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
யார் இந்த நீதிபதி சக்திவேல்: நீதிபதி சக்திவேல் கரூர் மாவட்டம் வாங்கல் அடுத்த காளிபாளையத்தைச் சேர்ந்தவர் ஆவார். சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமைப் பதிவாளராகப் பணியாற்றிய இவர், பின்னர் கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை நீதிபதியாக பணியாற்ரினார். பின்னர் இவரை சமீபத்தில் குடியரசுத் தலைவர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்திருந்தார்.
செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரிக்கும் அமர்வில் இருந்து நீதிபதி சக்திவேல் விலகியதை அடுத்து, நடைமுறைகளின் படி வேறு அமர்வில் விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை நீதிபதி அறிவித்து உள்ளார். மேலும் இந்த மனுவை இன்று மாலை 4 மணிக்குள் விசாரிக்க வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து அறிவதற்காக அவரது வழக்கறிஞர்கள் ஓமந்தூரார் மருத்துவமனை சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி அல்லி மருத்துவமனைக்கு நேரில் சென்று செந்தில் பாலாஜியின் உடல்நிலை கேட்டறிந்த பின்னர் அமலாக்கத்துறையின் ரிமாண்ட் கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்வார் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: Senthil Balaji Update: அமைச்சர் செந்தில் பாலாஜி கைது.. நள்ளிரவு முதல் நடந்தது என்ன?