தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 மற்றும் 30ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சிக்கான தேர்தல் நடத்தப்பட்டது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் ஜனவரி 2ஆம் தேதி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில், வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி, ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த கடலூர் மாவட்டம் சத்தியவாடி பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிட்ட செங்கல்வராயன், வேட்பாளர் மற்றும் முகவர் வருமுன்னரே வாக்கு பெட்டிகள் திறக்கப்பட்டதாக கிருஷ்ணகிரி மாவட்டம் தவரகரை பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்ட அமராவதி உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதேபோல திமுக சார்பில் மறுவாக்கு எண்ணிக்கை கோரி 50க்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதி ஆதிகேசவலு முன் விசாரணைக்கு வந்தன. அப்போது, மறுவாக்கு எண்ணிக்கை கோரி வேட்பாளர்கள் அளித்த மனுக்கள் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்து வரும் ஜனவரி 13ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலர்களுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், மறுவாக்கு எண்ணிக்கை கோரி அளித்த விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுக்காத தேர்தல் அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படும் என எச்சரித்து விசாரணையை ஜனவரி 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: சீமான் மீது அவதூறு வழக்கு - நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு