சென்னை: தஞ்சையில் பள்ளி மாணவி லாவண்யா மரணத்திற்கு நீதி கேட்டு பாஜக-வின் மாணவர் அமைப்பான ஏபிவிபி-யை சேர்ந்தவர்கள் சென்னை தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 33 பேர் கைதுசெய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதில், கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட மாணவர்களைச் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் துறையின் தலைவராக இருந்த டாக்டர் சுப்பையா சிறைக்குச் சென்று சந்தித்தார். ஏபிவிபி தேசிய செயற்குழுச் சிறப்பு அழைப்பாளரான மருத்துவர் சுப்பையா சண்முகம் கைதுசெய்யப்பட்டவர்களை நேரில் சந்தித்து (பிப்ரவரி 17) ஆறுதல் கூறியுள்ளார்.
![டாக்டர் abvp சுப்பையா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-quashedsubbaiahsuspensionorder-script-7204624_31032022110058_3103f_1648704658_682.jpeg)
மேலும், இது தொடர்பாக ஆளுநர் ஆர்.என். ரவியைச் சந்திக்க ராஜ்பவன் சென்ற ஐந்து பேர் குழுவில், இவரும் இடம் பெற்றிருந்தார். இதனையடுத்து, மருத்துவர் சுப்பையாவின் செயல் அரசு ஊழியருக்கான நடத்தை விதிகளை மீறும் வகையில் இருப்பதாகவும், அரசியல் இயக்கங்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் குற்றம்சாட்டி, சுப்பையாவை பணியிடை நீக்கம் செய்து மருத்துவக் கல்வி இயக்குநர் மற்றும் சுகாதாரத் துறை செயலாளர் ஆகியோர் உத்தரவிட்டிருந்தனர்.
இவற்றை எதிர்த்து மருத்துவர் சுப்பையா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணகுமார் முன் மார்ச் 24ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, சுப்பையா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், மனுதாரர் ஏபிவிபி எனும் மாணவர் சங்கத்தின் தலைவராக 2017 முதல் 2020 வரை பதவி வகித்துள்ளதாகவும், இந்த இயக்கம் அரசியல் அமைப்பு அல்ல எனவும் வாதிட்டார்.
![சென்னை உயர் நீதிமன்றம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-quashedsubbaiahsuspensionorder-script-7204624_31032022110058_3103f_1648704658_1101.jpeg)
மேலும், சுப்பையா எந்த விதமான அரசியல் கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை எனவும், சஸ்பெண்ட் உத்தரவுக்கான காரணங்களைக் கூறும் ஆதாரங்களை வெளியிட வேண்டும் எனவும் வாதிட்டார். தமிழ்நாடு அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், மாணவி லாவண்யா தற்கொலை விவகாரத்தில் அரசியல் கருத்துக்களைத் தனது ட்விட்டர் பக்கத்தில் டாக்டர் சுப்பையா பதிவு செய்துள்ளார் என தெரிவித்தார்.
மேலும், ஏபிவிபி ஒரு அரசியல் சார்ந்த அமைப்பு தான் எனவும் துறைரீதியான விசாரணை நடந்து வருவதாகவும், அதனைத் தொடர அனுமதிக்க வேண்டும் எனவும் விளக்கமளித்தார். இதனையடுத்து, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கிருஷ்ணகுமார், இன்று (மார்ச்.31) பிறப்பித்துள்ள தீர்ப்பில், சுப்பையா பணியிடை நீக்கம் செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளார்.
துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மீதான விசாரணையை 12 வாரங்களில் முடிக்க வேண்டுமென அரசுக்கும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென மருத்துவர் சுப்பையாவுக்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: வன்னியர் உள் இடஒதுக்கீடு ரத்து செல்லும்- உச்ச நீதிமன்றம்