சென்னை: காஞ்சிபுரம் படிப்பகம் மற்றும் டென்னிஸ் கிளப் தொடர்ந்திருந்த வழக்கில், தங்கள் மனமகிழ் மன்றத்திற்கு வரும் உறுப்பினர்கள் டாஸ்மாக் கடைகளிலிருந்து வாங்கிவரும் மதுபானங்களை அருந்துவதாகவும், அதற்காக உரிமம் வாங்க வேண்டுமென அரசு அலுவலர்களும், காவல் துறையும் கட்டாயப்படுத்துவதாகவும், மனமகிழ் மன்றத்தில் மது விற்பனை செய்யாதபோது அவ்வாறு கட்டாயப்படுத்தக் கூடாது என உத்தரவிட வேண்டுமெனக் கோரிக்கைவைத்திருந்தது.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது அரசுத் தரப்பில், பொது இடத்தில் மதுபானம் அருந்துவது தடைசெய்யப்பட்டு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, மனுதாரர் கிளப்பின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து காஞ்சிபுரம் படிப்பகம், டென்னிஸ் கிளப் தரப்பில் தாக்கல்செய்யப்பட்ட மேல்முறையீடு மனு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
கிளப் தரப்பில் தங்கள் மனமகிழ் மன்றத்தில் மது விற்பனை செய்யப்படுவதோ, கையாளுவதோ இல்லை என்றும், உறுப்பினர் கொண்டுவரும் மதுபானங்களை மட்டுமே குடித்துவிட்டுச் செல்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.
மனமகிழ் மன்றம் என்பது பொது இடம் இல்லை என்பதாலும், உள்ளே விற்பனை நடைபெறவில்லை என்பதாலும் உரிமம் வாங்க சட்டப்படி அவசியம் இல்லை என்றும், காவல் துறை வற்புறுத்தக்கூடாது எனவும் கோரிக்கைவைக்கப்பட்டது. தனி நபர் மதுபானங்களை வைத்துக்கொள்ளவும், பொது இடம் தவிரப் பிற இடங்களில் வைத்துக் குடிக்கத் தடையில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.
இதையடுத்து, மதுபானத்தைக் கையாளாத மனமகிழ் மன்றத்தில் அதன் உறுப்பினர்கள் எடுத்துச்செல்லும் மதுபானத்தை அருந்த, கிளப்புகள் உரிமம் பெற வேண்டுமா? என்பது குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை அடுத்த வாரத்திற்குத் தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: திமுகவுக்கு வெளிநாட்டவர் தீவிர வாக்குச் சேகரிப்பு