சென்னை: தமிழ்நாடு வனப்பகுதிகளை ஆக்கிரமித்துள்ள அன்னிய மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்கு, நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மேற்கு தொடர்ச்சி மலையில் வளர்ந்துள்ள அன்னிய மரங்களை அகற்றுவதற்கு நூறு நாள் வேலை திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிதியை பயன்படுத்த முடியாது என மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளதாகத் தமிழ்நாடு அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து விளக்கமளித்த மத்திய அரசும், அன்னிய மரங்களை அகற்றும் பணி, நூறுநாள் வேலை திட்டத்தில் சேர்க்கப்படவில்லை என தெரிவித்திருந்தது. இதனையடுத்து, இந்த வழக்கில் நேற்று (ஏப்ரல்.29) உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் அமர்வு, நூறு நாள் வேலை திட்டத்தில் அன்னிய மரங்களை அகற்றும் பணிகளைச் சேர்க்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
மேலும் நூறு நாள் வேலை திட்ட நிதியை அன்னிய மரங்களை அகற்ற பயன்படுத்த மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வனப்பகுதியில் உள்ள அன்னிய மரங்களை அகற்றும் பணியில் பழங்குடியினரை அமர்த்தவும் உத்தரவிட்டது.