சென்னை: வேலூரை சேர்ந்த பத்திரிகையாளர் கோபால்ஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், "முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 75 நாட்களுக்கு பிறகு கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5 ம் தேதி உயிரிழந்ததாக கூறப்பட்டது. இதுகுறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதி (ஓய்வு) ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்த இறுதி அறிக்கையில் பல்வேறு சந்தேகங்களை அரசிடம் அறிக்கையாக குறிப்பிட்டுள்ளது.
அதில்,ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் மக்கள் மத்தியில் தற்போதும் பேசப்படுகிறது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலிலிதாவுக்கு பல்வேறு உடல் உபாதைகள் இருந்த நிலையில் "மூச்சுத்திணறல்" மட்டுமே முக்கிய காரணம் என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கையில் தெரிவித்தது.
முக்கிய நபர்களை தவிர மருத்துவமனை ஊழியர்கள் வரை அவரை பார்க்க அனுமதிக்கவில்லை. ஜெயலிலிதாவுக்கு என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது என்பதை மருத்துவமனை நிர்வாகம் வெளிப்படையாக ஆணையத்திடம் குறிப்பிடவில்லை. டெல்லியில் இருந்து ஜெயலிலிதாவுக்கு சிகிச்சை அளிக்க வந்த "எய்ம்ஸ்" மருத்துவர்களுக்கு ஆடம்பரமான செலவுகளில் தங்கும் வசதிகளை தனியார் மருத்துவமனை செய்தது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
டிசம்பர் 4ம் தேதி மதியம் 3.50 மணிக்கு உயிரிழந்த ஜெயலலிதாவை மறுநாள் டிசம்பர் 5 ம் தேதி இரவு 11.30 மணிக்கு உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. மருத்துவமனை அறிக்கை பல இடங்களில் குழப்பத்தையும், சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது குறித்தும், வி.கே சசிகலா, அமைச்சர் விஜயபாஸ்கர், மற்றும் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் மற்றும் அப்போதைய தலைமை செயலாளர் ராம மோகன் ராவ் உள்ளிட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடத்தவும் ஆணையம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
ஆணையத்தின் அறிக்கையின் படி ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது, சிகிச்சை விவரங்கள் மற்றும் மரணம் குறித்தும் விசாரிக்கப்பட வேண்டும். சசிகலா மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தால் ஜெயலலிதாவின் மரணம் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை சிகிச்சை தொடர்பாக அதிகாரிகளுக்கு முழு விவரமும் தெரிந்த போதும் யாரும் இதுவரை வெளியிடாதது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
சிறப்பு சிகிச்சை அளிக்க மருத்துமனையால் அமைக்கப்பட்ட 4 மருத்துவர்கள் கொண்ட குழு, ஜெயலிலிதாவுக்கு என்ன சிகிச்சைகள் அளிக்கப்பட்டது? என்ன நோய்க்கான சிகிச்சையை அவர் முன்பு மேற்கொண்டார்? என்ன உடல் உபாதைகள் இருந்தன? என்பதை தெளிவாக குறிப்பிடாதது மேலும் சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.
அதனால், ஆறுமிகசாமி ஆணையம் அளித்த அறிக்கையின் அடிப்படையில் மாநில கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை விசாரணை மேற்கொண்டால், விசாரணையாக நேர்மையாக இருக்காது என்பதால், நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் சிபிஐ
விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வில் திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், கடந்த ஆகஸ்ட் மாதம் அமைச்சரவை முன் ஆறுமிகசாமி அறிக்கை வைக்கப்பட்டதாகவும், மருத்துவ விளக்கத்திற்காக மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கையின் அடிப்படையில் யார் தவறு செய்தார்கள் என்பதை மருத்துவ ரீதியான, விளக்கத்திற்கு பின் உரிய விசாரணை நடத்த உத்தரவிடப்படும் என தெரிவித்தார்.
இதையடுத்து தலைமை நீதிபதி, ஆறுமுகசாமி அறிக்கையின் அடிப்படையில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ( மார்ச் 27) ஒத்திவைத்தனர்.