சென்னை: வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தது. இவ்வாறு தாக்கல் செய்துள்ள மனுவில், “எங்களது நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பதற்காக திட்டமிட்டபட்டிருந்த ’கரோனா குமார்’ என்ற படத்தில் நடிப்பதாக நடிகர் சிலம்பரசனை ஒப்பந்தம் செய்தோம்.
மேலும், கரோனா குமார் படத்தில் நடிப்பதற்காக சிம்புவுக்கு 9.5 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டு, 4.5 கோடி ரூபாய் முன்பணமாக கடந்த 2021ஆம் ஆண்டு அளிக்கப்பட்டது. இந்நிலையில், ரூ.4.5 கோடி வரையிலான தொகையை பெற்றுக் கொண்ட நடிகர் சிம்பு, படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில், கொரோனா குமார் படத்தை முடித்து கொடுக்காமல், மற்ற படங்களில் நடிக்க சிம்புவுக்கு தடை விதிக்க வேண்டும்” என மனுவில் குறிப்பிட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து, மனு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் சிலம்பரசன் மற்றும் வேல்ஸ் நிறுவனம் இடையே போடப்பட்ட ஒப்பந்தம் சமர்பிக்கப்பட்டது. அதில் ஒரு கோடி ரூபாய் மட்டுமே சிலம்பரசனுக்கு வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், வேல்ஸ் நிறுவனம் சார்பில், கொரோனா குமார் படத்தில் நடிப்பதற்காக சிலம்பரசனுக்கு மொத்தம் 9.5 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்ட நிலையில், முன்பணமாக 4.5 கோடி ரூபாயை கடந்த 2021ஆம் ஆண்டு ரொக்கமாக அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 4.5 கோடி ரூபாய் கொடுத்ததற்கான உரிய ஆதாரம் இல்லாததால், ஒப்பந்தத்தில் உள்ளபடி ஒரு கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை செலுத்த சிலம்பரசனுக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், வழக்கானது நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு இன்று (செப்.19) மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில், நடிகர் சிம்பு தரப்பில், திரைப்பட ஒப்பந்தத்தின்படி படத்தை குறிப்பிட்ட ஒரு ஆண்டுக்குள் தொடங்காவிட்டால், முன்பணத்தை திருப்பித் தர வேண்டிய அவசியமில்லை. அதனால், ஒப்பந்தத்தை மீறியதாக வேல்ஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, வழக்கை விசாரித்த நீதிபதி, அக்டோபர் 6ஆம் தேதி வேல்ஸ் நிறுவனம் விசாரணை தொடர்பாக பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தார்.
இதையும் படிங்க: TTF Vasan Arrest: நண்பர் வீட்டில் பதுங்கி இருந்த யூடியூபர் டிடிஎஃப் வாசன் கைது!