சென்னை: வெளிநாடுகளில் இருந்து வாங்கும் சொகுசு கார்களை இறக்குமதி செய்ய, கார் இறக்குமதி செய்பவர்களுக்கு சில வழிமுறைகள் உள்ளன.
கார் விலை மற்றும் சுங்கவரி ஆகியவற்றை சேர்த்து வரும் தொகையில் 20 விழுக்காடு நுழைவு வரி செலுத்த வேண்டும். நுழைவு வரி தொகையை, மாநில வணிக வரித்துறையிடம் செலுத்த வேண்டும். இதில் முதல்முறையாக வரிவிலக்கு பெற்றவர் சச்சின்.
வரி விலக்கு
இங்கிலாந்தில் கிரிக்கெட் தொடர் ஆட சென்ற சச்சினுக்கு 2002இல் பிரபல ரேஸ் கார் சாம்பியன் மைக்கல் ஸ்கும்ச்சார், இலவசமாக ஃபெராரி 360 மாடனா காரை பரிசாக வழங்கினார். இந்த காரின் மதிப்பு 2.1 கோடி ரூபாய். இதற்கு நுழைவு வரி மட்டுமே தனியாக ரூ.1.6 கோடி ஆகும்.
அப்போதைய வருமான வரித்துறை அமைச்சர் பிரமோத் மகாஜனிடம் கடிதம் அளித்த சச்சினுக்கு உடனடி அனுமதி கிடைக்கவே, வரி ஏதுமின்றி தனது சொகுசு காரை இறக்குமதி செய்தார். பின்னாளில் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக அந்தக் காரை அவர் விற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்ச்சையில் சிக்கிய நடிகர் விஜய்
இந்நிலையில் 2012ஆம் ஆண்டு வெளிநாட்டு இறக்குமதி காருக்கு நுழைவு வரி வசூலிக்க தடை கோரி நடிகர் விஜய் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கைத் தனி நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், பிறருக்கு முன்மாதிரியாக திகழ வேண்டியவர்கள் இவ்வாறு மனு தாக்கல் செய்திருக்கக் கூடாது என்பது போன்ற விமர்சனங்களும் நடிகர் விஜய் மீது வைக்கப்பட்டது.
இந்நிலையில், நடிகர் தனுஷ் தனது இறக்குமதி காருக்கு நுழைவு வரி விலக்கு கோரி 2015ல் தாக்கல் செய்த வழக்கு நாளை (ஆகஸ்ட் 5) விசாரணைக்கு வருகிறது.
நடிகர் விஜய்யை தொடர்ந்து தனுஷ்
இறக்குமதி வாகனங்களுக்கு நுழைவு வரி விதிக்க தடை விதித்து கேரள உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
கேரள உயர் நீதிமன்றத்தில் உத்தரவை எதிர்த்த வழக்கில், நுழைவு வரி வசூலிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதாக 2019ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கடந்த 2015ஆம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு நுழைவு வரி வசூலிக்க தடை கோரி நடிகர் தனுஷ், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
கார் நுழைவு வரி வழக்கு விசாரணை
அவருடைய காருக்கு 60 லட்சத்து 66 ஆயிரம் ரூபாயை நுழைவு வரியாக செலுத்த வணிக வரித்துறை உத்தரவிட்டதை எதிர்த்து தனுஷ் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 50 விழுக்காடு வரியை செலுத்தும்பட்சத்தில் காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு உத்தரவிட்டது.
அதன் பின் இந்த வழக்கு, நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தனுஷ் தரப்பில் வழக்கறிஞர்கள் எவரும் ஆஜராகாததால், விசாரணையை ஆகஸ்ட் 5ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார். நாளைய தினம் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே நுழைவு வரி வசூலிக்க தடை கோரி வழக்கு தொடர்ந்த நடிகர் விஜய்க்கு அபராதம் விதித்த உயர் நீதிமன்றம், அவரை விமர்சித்திருந்த நிலையில், தற்போது தனுஷ் தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நடிகர் விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு தடை