சென்னை: எழும்பூர் காசா மேஜர் சாலையில் நேற்று (செப்.23) இரவு 9.30 மணியளவில் அதிவேகமாக வந்த சொகுசு காரொன்று எதிரே வந்த நேனோ கார், ஆட்டோ, இருசக்கர வாகனம் உள்பட ஐந்து வாகனங்களின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் நேனோ காரை ஓட்டி வந்த வில்சன், ஆட்டோ ஓட்டுநர் மற்றும் இருசக்கர வாகன ஓட்டுநர் காயமடைந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநரான ராதாகிருஷ்ணன் (56) என்பவரை விசாரித்தபோது அவர் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் என்பதும், அவர் மதுபோதையில் காரை ஓட்டியதும் தெரியவந்தது.
இந்த விபத்து தொடர்பாக சிந்தாதிரிப்பேட்டை போக்குவரத்துப் புலனாய்வு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மதுபோதையில் கார் ஓட்டிய வழக்கறிஞர் ராதாகிருஷ்ணனை கைது செய்துள்ளனர். இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விபத்தில் திருப்பம்
விபத்தில் சிக்கிய நேனோ காரின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்த நிலையில், காவல் துறையினர் அந்த வாகனத்தை சோதனை செய்தனர். அப்போது, அந்த காரில் ஆறு யானை தந்தங்கள், மான்கொம்பு உள்ளிட்ட பொருட்கள் இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவற்றை பறிமுதல் செய்ய காவல் துறையினர், இது தொடர்பாக வனத்துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் இது தொடர்பாக காரை ஓட்டி வந்த வில்சனிடம் நடத்திய முதல்கட்ட விசாரணையில், ஆப்ரிக்காவில் உள்ள தனது உறவினர்கள் அன்பளிப்பாக கொடுத்ததாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருவதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நல்ல செய்தி - பெண் காவலர்களின் பணிநேரம் 8 மணிநேரமாக குறைப்பு