சென்னை: தமிழ்நாட்டையே உலுக்கி வரும் பல ஆயிரம் கோடி மோசடி செய்த நிதி நிறுவனங்கள் தொடர்பான வழக்கு விசாரணை எந்த நிலையில் உள்ளது என பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் வைத்து, அதன் ஐஜி ஆசியம்மாள் செய்தியாளர்களைச் சந்தித்து விரிவாக கூறினார்.
அப்போது பேசிய ஐஜிஆசியம்மாள், “ஆருத்ரா கோல்டு டிரேடிங் 2 ஆயிரத்து 438 கோடி ரூபாய் மோசடி வழக்கில், இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 6.35 கோடி ரூபாய் பணம், 1.13 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள், 22 கார்கள், 96 கோடி ரூபாய் வங்கி கணக்கு வைப்பில் இருந்த பணம் ஆகியவை முடக்கம் செய்து, 103 அசையாச்சொத்துகள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம்.
ஹிஜாவு நிதி நிறுவனம் 4,400 கோடி ரூபாய் மோசடி தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 3 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் பணம், 448 கிராம் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளி, 80 லட்சம் மதிப்புள்ள எட்டு கார்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 162 வங்கிக் கணக்குகளில் இருந்த 14.47 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளது.
மேலும், 75.6 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துகள், 90 கோடி ரூபாய் மதிப்புள்ள 54 அசையும் சொத்துகள் கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம். எல்.என்.எஸ் நிதி நிறுவனம் 5 ஆயிரத்து 900 கோடி ரூபாய் மோசடி தொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
4 இயக்குநர்களுக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. 1.14 கோடி ரூபாய் பணம், 34 லட்சம் ரூபாய் மதிக்கத்தக்க தங்கம், வெள்ளிப் பொருட்கள், 18 கார்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 791 வங்கிக் கணக்குகளில் இருந்த ரொக்கம் மற்றும் முதலீடு தொகை என மொத்தம் 121 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளது. 38.49 கோடி ரூபாயிலான அசையா சொத்துகள் கண்டறியப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஆம்ரோ கிங் அசோசியேட்ஸ் லிமிடெட் நிறுவனம் 161 கோடி ரூபாய் மோசடி வழக்குத் தொடர்பாக இயக்குநர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 49 கிராம் தங்க நகைகள், 450 கிராம் வெள்ளிப் பொருட்கள், ஒரு சொகுசு கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு, சொத்துகளை முடக்க இருக்கிறோம்.
ஏ.ஆர்.டி ஜூவல்லர்ஸ் 427 முதலீட்டாளர்களிடம் இருந்து 6.5 கோடி ரூபாய் முதலீடு பெற்று மோசடி செய்த வழக்கு தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில், 7.5 லட்சம் ரூபாய் பணம், 80 லட்சம் ரூபாய் மதிக்கத்தக்க தங்கம், வெள்ளிப் பொருட்கள், வங்கிக் கணக்கில் இருந்த 3 லட்சம் ரூபாய் ஆகியவை முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஏ.ஆர்.டி ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் ஆல்வின் ஞானதுரை மற்றும் ராபின் ஆரோன் ஆகியோரை பிடிக்க லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்ட எல்பின் லிமிடெட் நிதி நிறுவனம் 962 கோடி ரூபாய் மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 3 பேர் கைது செய்யப்பட்டு, 400 கிராம் தங்கம், 5 கிலோ வெள்ளிப் பொருட்கள், 139 கோடி மதிப்பிலான 257 அசையா சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தஞ்சாவூரைச் சேர்ந்த ரஹத் ட்ரான்ஸ்போர்ட் நிதி நிறுவனம் 411 கோடி மோசடி தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 153 வாகனங்களில் 43 வாகனங்கள் கைப்பற்றப்பட்டு, மற்ற வாகனங்களைப் பறிமுதல் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். மேலும், 65 ஏக்கர் அசையா சொத்துகள் கண்டறியப்பட்டு முடக்கம் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சி.வி.ஆர்.எஸ் சிட்ஸ் பிரைவேட் லிமிடெட் 48 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டு, 30 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துகள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யும் நடவடிக்கை நடைபெற்று வருகிறது. ஐஎப்எஸ் வழக்கில் விசாரணை அதிகாரியான கபிலன் மீது பணியிடை நீக்கம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, விசாரணைக்காக லஞ்ச ஒழிப்புத் துறையிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மேலும் அவர் விசாரித்த அனைத்து வழக்குகளையும் மீண்டும் புது விசாரணை அதிகாரி விசாரிக்கத் தொடங்கி உள்ளார். அதன் அடிப்படையில் தொடர்ந்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆருத்ரா கோல்டு டிரேடிங் மோசடி வழக்கில் விசாரணைக்காக பலமுறை அழைக்கப்பட்டும் நடிகரும், பாஜக நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷ் ஆஜராகாததால், துபாயில் இருக்கும் அவரை பிடித்து விசாரணை செய்ய லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விசாரணையில் இருந்து ஆஜராகாமல் இருக்க உயர் நீதிமன்றத்தை ஆர்.கே.சுரேஷ் நாடியுள்ளார். பொருளாதார குற்றப்பிரிவு விசாரிக்கும் எட்டு வழக்குகளிலும் தரகர்களாக பலர் செயல்பட்டு, கோடிக்கணக்கான ரூபாய் வசூல் செய்து கொடுத்துள்ளனர். ஆனால், குற்ற எண்ணத்தோடு இந்த பணத்தை மோசடி செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் பணத்தை வசூல் செய்த தரகர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது மட்டுமே கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறிப்பாக, வெளிநாடுகளில் தலைமறைவாக இருக்கும் முக்கிய நிர்வாகிகளே, இந்த வழக்குகளில் பெரும்பாலான முக்கிய குற்றவாளிகள் ஆவர். பொருளாதார குற்றப்பிரிவில் ஒவ்வொரு வழக்குகளிலும் குறைந்த அளவிலேயே புகார்கள் வந்துள்ளன. நாங்கள் நடத்திய சோதனையின் மூலம் பறிமுதல் செய்யப்பட்ட எலக்ட்ரானிக் ஆவணங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்வதன் மூலமாக, பாதிக்கப்பட்டவர்கள் அத்தனை பேரின் தகவல்களையும் எடுத்துள்ளோம்.
இந்த வழக்குகள் அனைத்திலுமே முக்கிய நிர்வாகிகள் மற்றும் முக்கியத் தரகர்கள் ஆகியோர்களைக் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ளும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இந்த வழக்குகளில் கைதான நபர்கள் கையில் அதிகளவு பணம் இருக்கிற காரணத்தினால், மிகப்பெரிய வழக்கறிஞர்களை வைத்து ஜாமீனில் வெளி வந்து விடுகின்றனர். இதற்காக நீதிமன்றத்தில் விசாரணை அதிகாரிகள் ஆஜராவதிலேயே தொடர்ந்து வழக்கு அடுத்த கட்டம் செல்வதற்கு காலதாமதம் ஆகிறது.
இந்த எட்டு வழக்குகளிலும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாக இருந்தாலும், அதில் குறைந்த அளவே பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது, புகார் கொடுத்த முதலீட்டாளர்களின் பலர் அதிக வட்டி காரணமாக முதலீடு செய்த பணத்திற்கு அதிக லாபம் வாங்கி உள்ளனர். குறிப்பாக, ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்து 20 சதவீதம் வட்டி என்ற அடிப்படையில் ஒரு வருடத்திற்கு 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணம், லாபம் பார்த்தவர்கள் என பல முதலீட்டாளர்கள் உள்ளனர்.
இவ்வாறாக அவர்கள் முதலீடு செய்த ஒரு லட்சம் ரூபாயைத் தவிர, மீதம் உள்ள 1 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணத்தை திரும்பி ஒப்படைக்க வேண்டும். புகார் கொடுத்த முதலீட்டாளர்களில், இது போன்று அதிக லாபம் சம்பாதித்த நபர்களைப் பட்டியலிட்டு, அவர்களிடம் இருந்து அந்தப் பணத்தை வசூல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம்.
தற்போது அதிக வட்டி தருவதாகக் கூறி விளம்பரம் செய்து பொதுமக்களிடம் ஆசை காட்டும் நபர்கள் குறித்து தகவல் கொடுத்தால், உடனடியாக அவர்கள் மீது கைது நடவடிக்கை பாயும். இது போன்ற பொருளாதார குற்றப்பிரிவு வழக்குகளில் பறிமுதல் செய்யப்படும் சொத்துகளை, விசாரணை அதிகாரிகளோடு இணைந்து வருவாய்த் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, அந்தப் பணத்தை பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒப்படைக்கும் பணி என்பது நடைபெறும்.
தற்போது இதில் விசாரணை அதிகாரிகள் இல்லாமலேயே மாவட்ட வருவாய் அதிகாரிகள் ஆய்வு செய்து, பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளை விற்பனை செய்து பொதுமக்களிடம் ஒப்படைக்க அரசு வழிவகை செய்துள்ள காரணத்தினால், விரைவில் முதலீட்டாளர்களுக்கு பணத்தைத் திருப்பி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இந்த வழக்குகளில் முதலீட்டாளர்களிடம் இருந்து வசூல் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் இந்தியாவை விட்டு வெளியே செல்லவில்லை. ஹிஜாவு வழக்கில் மட்டுமே சிறிது அளவு மோசடி செய்யப்பட்ட பணம் வெளிநாட்டில் முதலீடுகளாக மறைத்து வைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஐஎஃப்எஸ், ஆருத்ரா மற்றும் ஹிஜாபு ஆகிய வழக்குகளை பற்றிய ஆவணங்களை பெற்றுக்கொண்டு விசாரணையைத் தொடங்கிய அமலாக்கத் துறையினர், திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் எல்பின் நிறுவனம் தொடர்பான மோசடி குறித்தும், அமலாக்கத்துறை விசாரணையைத் தொடங்கி உள்ளது.
பொருளாதார குற்றப் பிரிவில் வழக்குகளில் சிக்கிய நிர்வாகிகள், தங்கள் மீதான குற்றங்களைக் குறைப்பதற்காக தொடர்ந்து வாட்ஸ்அப் மூலம் முதலீட்டாளரிடம் தொடர்பு கொண்டு வருகின்றனர். அதனை முதலீட்டாளர்கள் நம்ப வேண்டாம்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: திருச்சியில் கொடிகட்டி பறக்கும் ஒரு நம்பர் லாட்டரி விற்பனை.. காவல்துறை நடவடிக்கை என்ன?