திருப்பூர் சாயப்பட்டறையில் இருந்து துணி பண்டல்களைத் திருடிச் சென்றதாக, தேனி மாவட்டம், பங்களாபட்டியைச் சேர்ந்த ஓட்டுநர் சஞ்சீவி என்பவரை, திருப்பூர் வேலம்பாளையம் காவல் துறையினர் கைது செய்தனர். திருப்பூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 2014ஆம் ஆண்டு நடந்த இந்தச் சம்பவம் தொடர்பாக, உயிரிழந்த சஞ்சீவியின் மனைவி சத்யா, மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் மனு தாக்கல் செய்தார்.
அதில், 'தனது கணவரைக் காவலில் வைத்து அடித்துக் கொன்றதாகவும் தெரிவித்திருந்தார். அவருக்கு நுரையீரல் சம்பந்தமான எந்தப் பிரச்னையும் இல்லை' என்றும் உறுதிபடத் தெரிவித்திருந்தார்.
பின் அந்த மனுவில் சஞ்சீவியின் மனைவி சத்யா, திருப்பூர் வேலம்பாளையம் காவல் நிலையத்தின் அப்போதைய சிறப்பு உதவி ஆய்வாளர், கோவை மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் சண்முகய்யா, கோவை மருத்துவக் கல்லூரி தடயவியல் துறைத் தலைவர் ஜெயசிங், திருப்பூர் கிளைச் சிறை உதவி ஜெயிலர் சந்திரசேகர் உள்ளிட்டோருக்கு எதிராகப் புகார் தெரிவித்திருந்தார்.
உடற்கூறாய்வு பரிசோதனை முடிவுகள் தவறாக அளிக்கப்பட்டதாகவும், தன் கணவர் மரணத்துக்கு சிறைக் காவலரும், தடயவியல் துறைத்தலைவரும் உடந்தையாக இருந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த மாநில மனித உரிமைகள் ஆணைய பொறுப்புத் தலைவர் துரை ஜெயச்சந்திரன், புகார்தாரர் கூறும் குற்றச்சாட்டுகளில் முகாந்திரம் உள்ளதாகக் கூறி, சஞ்சீவியின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு 5 லட்சம் ரூபாயை இழப்பீடாக, ஒரு மாதத்தில் வழங்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டார்.
மேலும், திருப்பூர் வேலம்பாளையம் காவல் நிலையத்தின் அப்போதைய சிறப்பு உதவி ஆய்வாளர், கோவை மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் சண்முகய்யா, கோவை மருத்துவக் கல்லூரி தடயவியல் துறைத் தலைவர் ஜெயசிங், திருப்பூர் கிளைச் சிறை உதவி ஜெயிலர் சந்திரசேகர் ஆகியோருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் அரசுக்கு பரிந்துரைத்துள்ளார்.